கம்பம்மெட்டு பகுதியில் வருவாய்த்துறை சோதனை சாவடி பொதுமக்கள் வலியுறுத்தல்
கம்பம்மெட்டு பகுதி வழியாக கேரள மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்தி செல்வதை தடுக்க வருவாய்த்துறை சோதனை சாவடி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கம்பம்,
தேனி மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் இருந்து கம்பம்மெட்டு வழியாக தினந்தோறும் வாகனங்களில் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்துவது தொடர்கதையாய் நடைபெற்று வருகின்றது. ரேஷன் கடைகளில் மாதந்தோறும் கார்டுதாரர்களுக்கு விலையில்லா அரிசி வினியோகம் செய்யப்படுகிறது. தேனி மாவட்டத்தில், கூடலூர், கம்பம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் சிலர் ரேஷன் கடைகளில் வினியோகம் செய்யப்படும் அரிசியை கார்டுதாரர்களிடம் குறைந்த விலைக்கு வாங்குகின்றனர்.
பின்னர் அதனை மூட்டைகளில் அடைத்து விற்பனை செய்வதற்கு தயார் செய்கின்றனர். அந்த அரிசி மூட்டைகளை மோட்டார் சைக்கிள்கள், சரக்கு வேன்கள் உள்ளிட்ட வாகனங்களில் ஏற்றி கேரள மாநிலத்துக்கு கொண்டு சென்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர். இன்னும் சிலர் சிறிய மூட்டைகளில் அரசு பஸ் மூலம் கம்பம்மெட்டு, குமுளி வழியாக கேரளாவுக்கு கடத்தி சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கம்பம்மெட்டு சாலையில் வருவாய்த்துறையினர் தற்காலிகமாக சோதனை சாவடி அமைத்திருந்தனர். அதில் கிராம நிர்வாக அலுவலர் தலைமையில் கிராம உதவியாளர்கள் 2 பேர் பணியில் அமர்த்தப்பட்டனர்.
நாளடைவில் இந்த சோதனை சாவடிக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் பணிக்கு வர முடியவில்லை. காரணம் அவருடைய வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் உதவியாளர்களும் வரவில்லை. அந்த சோதனை சாவடியில் அடிப்படை வசதியும் இல்லை. இதனால் சோதனை சாவடி செயல்படாமல் போனது. வருவாய்த்துறை சோதனை செய்வதை நிறுத்தப்பட்டதால், மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இது குறித்து பொதுமக்களிடம் கேட்ட போது, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும், பறக்கும்படை அதிகாரிகளும், வாகன சோதனையில் ஈடுபட்டாலும் ரேஷன் அரிசி கடத்தலை முழுமையாக தடுக்க முடியவில்லை. எனவே அரிசி கடத்தலை தடுக்க கம்பம்மெட்டு மலைப்பாதையில் நிரந்தரமாக வருவாய்த் துறையினர் சோதனைச்சாவடிகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story