பெண் பயணிகளின் பாதுகாப்பு குறித்து ரெயில் நிலையத்தில் பள்ளி மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம்


பெண் பயணிகளின் பாதுகாப்பு குறித்து ரெயில் நிலையத்தில் பள்ளி மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 31 July 2018 10:30 PM GMT (Updated: 31 July 2018 7:34 PM GMT)

பெண் பயணிகளின் பாதுகாப்பு குறித்து கரூர் ரெயில் நிலையத்தில் பள்ளி மாணவிகள் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

கரூர்,

சென்னையில் சமீபத்தில் ரெயில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்ததில் உயிரிழப்பு ஏற்படும் வகையில் அடுத்தடுத்து விபத்து சம்பவம் நிகழ்ந்தது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் ரெயிலில் பயணம் செய்யும் பெண்களிடம் நகை பறிப்பு உள்ளிட்டவையும் அவ்வப்போது நிகழ்ந்தன. எனவே இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி ரெயில் நிலையங்களில் பாதுகாப்பினை மேற்கொள்ள வேண்டும் என தென்னக ரெயில்வே அறிவுறுத்தியது. அதன்படி கரூர் ரெயில் நிலைய ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் பிரிவு சார்பில் பெண் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் ரெயிலில் ஆபத்தான பயணத்தை தவிர்ப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் பதாகைகளை கையில் பிடித்தபடி கரூர் ரெயில் நிலையத்தில் ஊர்வலமாக சென்றனர். இதனை கரூர் ரெயில்வே பாதுகாப்புபடை இன்ஸ்பெக்டர் தர்மாராம் பவாரி தொடங்கிவைத்தார்.

அப்போது சமூக முன்னேற்றத்துக்கு அடித்தளமாக இருக்கும் பெண்களிடம் பாலியல் சீண்டல்களை செய்யலாமா?, பெண்கள் நம் நாட்டின் கண்கள் என்பன உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியபடியே மாணவிகள் சென்றனர். மேலும் ரெயில் பயணத்தின் போது பெண்கள் அதிக நகைகளை அணிய வேண்டாம், இரவு நேரத்தில் ஜன்னல் அருகே தலை வைத்துப்படுப்பதை தவிர்க்கவும், ரெயில் பெட்டி நுழைவு வாயிலில் நின்று பயணிப்பதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்டவற்றை வலியுறுத்தி ரெயில் பயணிகளுக்கு துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.

அப்போது ரெயில் நிலைய குற்ற சம்பவத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க ஆர்.பி.எப். உதவி மைய எண் 182-ஐ அழைக்குமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கரூர் ரெயில் நிலைய மேலாளர் பாஸ்கர், ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன், தலைமை ஆசிரியை விஜயராணி, உதவி தலைமை ஆசிரியர் பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story