புவனகிரி அருகே மின்சாரம் தாக்கி வியாபாரி பலி


புவனகிரி அருகே மின்சாரம் தாக்கி வியாபாரி பலி
x
தினத்தந்தி 31 July 2018 10:15 PM GMT (Updated: 2018-08-01T01:14:42+05:30)

புவனகிரி அருகே மின்சாரம் தாக்கி வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார்.

புவனகிரி,


புவனகிரி அருகே உள்ள அயன்குறிஞ்சிப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 28). வியாபாரியான இவர் மினிலாரி மூலம் ஊர், ஊராக சென்று பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். அந்த வகையில் சக்திவேல் நேற்று முன்தினம் மாலை பெருமாத்தூர் பாலுநகருக்கு பழைய இரும்பு பொருட்களை வாங்க மினிலாரியில் சென்றார். பின்னர் அவர் அப்பகுதி மக்களிடம் இருந்த பழைய இரும்பு குழாய்கள் உள்ளிட்ட இரும்பு பொருட்களை வாங்கி, அவற்றை சொந்த ஊருக்கு எடுத்து செல்வதற்காக மினிலாரியில் ஏற்றிக் கொண்டிருந்தார்.

அப்போது இரும்பு குழாய் ஒன்றை சக்திவேல் மினிலாரியில் ஏற்ற முயன்றபோது, எதிர்பாராதவிதமாக அந்த இரும்பு குழாய் மேல் பகுதியில் சென்ற மின் கம்பி மீது உரசியது. இதில் மின்சாரம் தாக்கியதில் சக்திவேல் தூக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்தார். இதைபார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சக்திவேல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story