புதுச்சேரி தொழில் அதிபரிடம் இரும்புத்தாது வழங்குவதாக கூறி ரூ.58 லட்சம் மோசடி, கொல்கத்தாவை சேர்ந்தவர் கைது


புதுச்சேரி தொழில் அதிபரிடம் இரும்புத்தாது வழங்குவதாக கூறி ரூ.58 லட்சம் மோசடி, கொல்கத்தாவை சேர்ந்தவர் கைது
x
தினத்தந்தி 1 Aug 2018 4:45 AM IST (Updated: 1 Aug 2018 1:59 AM IST)
t-max-icont-min-icon

மார்க்கெட் விலையைவிட குறைவான விலையில் இரும்புத்தாது வழங்குவதாக கூறி புதுச்சேரி தொழில் அதிபரிடம் ரூ.58 லட்சம் மோசடி செய்த கொல்கத்தாவை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி,

புதுவை சுத்துக்கேணியில் தனியார் இரும்பு பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உள்ளது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் பிரசாந்த் பன்சால். இவர் சில மாதங்களுக்கு முன்பு இரும்பு தாது பொருட்கள் தொடர்பான விளம்பரத்தை இணையதளத்தில் பார்த்தார்.

அதைத்தொடர்ந்து கொல்கத்தாவை சேர்ந்த ஷியாம் மைத்ரா (வயது 44) என்பவரை அவர் தொடர்பு கொண்டுள்ளார். ஷியாம் மைத்ரா தான் இந்திய அரசு நிறுவனம் ஒன்றில் துணை பொதுமேலாளரக பதவி வகிப்பதாகவும், மார்க்கெட் விலையைவிட குறைந்த விலையில் இரும்புத்தாது சப்ளை செய்வதாகவும் கூறியுள்ளார்.

அதை நம்பிய பிரசாந்த் பன்சால் 200 மெட்ரிக் டன் இரும்புத்தாது வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு விலையாக ரூ.58 லட்சத்து 23 ஆயிரம் பேசப்பட்டது. முதல்கட்டமாக இதற்காக பிரசாந்த் பன்சால் ரூ.28 லட்சத்தை ஷியாம் மைத்ராவின் வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார். மீதமுள்ள பணத்தை இரும்புத்தாது கிடைத்தவுடன் தருவதாகவும் கூறியுள்ளார்.

இந்தநிலையில் சமீபத்தில் 6 கன்டெய்னர்களில் இரும்புத்தாது அனுப்பி உள்ளதாகவும், மீதி பணத்தை கொடுத்தால் மட்டுமே இரும்புத்தாது தரப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும் அதற்குண்டான சரக்கு மற்றும் சேவை வரிக்கான ஆவணங்களையும் ஆன்லைன் மூலம் காட்டியுள்ளார்.

அதனை உண்மை என்று நம்பிய பிரசாந்த் பன்சால் மீதி பணத்தையும் செலுத்தியுள்ளார். ஆனால் சொன்னபடி இரும்புத்தாது அவருக்கு கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து ஷியாம் மைத்ராவை தொடர்புகொள்ள முயன்றபோது அவரது செல்போனும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

இதனால்தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பிரசாந்த் பன்சால் சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஷியாம் மைத்ராவை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சிறப்பு அதிரடிப்படை போலீஸ்காரர் அருள்வேலன் ஆகியோர் கொல்கத்தா சென்றனர். அங்கு கொல்கத்தா போலீசார் உதவியுடன் ஷியாம் மைத்ராவை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் இதேபோல் பலரிடம் மோசடி செய்திருப்பது கண்டறியப்பட்டது.

அவரிடமிருந்து 2 சொகுசு கார்கள், தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் ரொக்கப்பணம் என ரூ.45 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான ஷியாம் மைத்ரா மீது குர்கான் நகர போலீசிலும், ஐதாராபாத்திலும் வழக்குகள் உள்ளன. மேலும் பல்வேறு இடங்களில் இதுபோன்று அவர் கைவரிசை காட்டியுள்ளார்.

இந்த மோசடியில் குற்றவாளியை விரைந்து கைது செய்த போலீசாரை டி.ஐ.ஜி. சந்திரன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் பர்னுவால், போலீஸ் சூப்பிரண்டு செல்வம் ஆகியோர் பாராட்டினார்கள்.


Next Story