கட்டாய திருமணம் செய்து 17 வயது மாணவியை பலாத்காரம் செய்த கார் டிரைவர் கைது


கட்டாய திருமணம் செய்து 17 வயது மாணவியை பலாத்காரம் செய்த கார் டிரைவர் கைது
x
தினத்தந்தி 31 July 2018 9:45 PM GMT (Updated: 31 July 2018 8:29 PM GMT)

கோவையில் 17 வயது மாணவியை கட்டாய திருமணம் செய்து பலாத்காரம் செய்த கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை,

திருச்சி பொன்மலை பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 25), கார் டிரைவர். கோவை வந்த இவர் திருச்சிக்கு ரெயிலில் சென்ற போது, கோவையில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்த 17 வயது மாணவியை சந்தித்தார். இதனால் அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டது. பின்னர் அந்த நட்பு காதலாக மாறியது.

இதையடுத்து சதீஷ், அந்த மாணவியை அழைத்துச்சென்று திருமணம் செய்ததாக தெரிகிறது. இது குறித்து அந்த மாணவியின் பெற்றோர் கோவை கிழக்கு மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், சதீஷ், அந்த மாணவியை கட்டாய திருமணம் செய்து பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இதை தொடர்ந்து போலீசார் கார் டிரைவர் சதீஷ் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுப்பு சட்டத்தின் (போக்சோ) கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் போலீசார் சதீசை கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது:–

18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளை திருமணம் செய்வது தவறு. சில இடங்களில் பெற்றோரே தங்கள் குழந்தைகளை சிறு வயதில் திருமணம் செய்து கொடுக்க ஏற்பாடுகள் செய்கிறார்கள். இதை அதிகாரிகள் அறிந்ததும் அந்த திருமணத்தை தடுத்து நிறுத்துகிறார்கள். எனவே திருமணம் செய்யும்போது அந்த பெண்ணின் உண்மையான வயது என்ன? என்பதை தெரிந்து கொண்டு திருமணம் செய்ய வேண்டும்.

18 வயதுக்கு கீழ் இருக்கும் சிறுமியை அவரின் பெற்றோரே திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினாலும் எக்காரணத்தை கொண்டும் திருமணம் செய்யக்கூடாது. அவ்வாறு திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தினால் கண்டிப்பாக சம்பந்தப்பட்ட நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story