ரெயில் தண்டவாள பராமரிப்பு பிரிவு பெண் பணியாளர்களுக்கு பாதுகாப்பு, டி.ஆர்.இ.யூ. தொழிற்சங்கம் வலியுறுத்தல்


ரெயில் தண்டவாள பராமரிப்பு பிரிவு பெண் பணியாளர்களுக்கு பாதுகாப்பு, டி.ஆர்.இ.யூ. தொழிற்சங்கம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 1 Aug 2018 4:15 AM IST (Updated: 1 Aug 2018 2:00 AM IST)
t-max-icont-min-icon

ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பிரிவு பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை ரெயில் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

மதுரை,

ரெயில்வே துறையில் உள்ள என்ஜினீயரிங் பிரிவு தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் நேற்று ஆர்ப்பாட்டடம் நடந்தது. மதுரை ரெயில்நிலையத்தின் மேற்கு நுழைவுவாயில் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு டி.ஆர்.இ.யூ. தொழிற்சங்கத்தின் செயலாளர் சங்கரநாராயணன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தின் போது, ரெயில்வேயில் பணியாற்றி வரும் 60 சதவீத ஊழியர்களுக்கான புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தண்டவாள பராமரிப்பு பணிக்கு தேர்வான ஊழியர்களை அதிகாரிகளின் வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்தக்கூடாது. இரவுப்பணி, கூடுதல் நேர பணி அலவன்சுகளை பழைய விகிதப்படி வழங்க வேண்டும்.

தண்டவாள பராமரிப்பு பணியாளர்கள், வெல்டிங் ஊழியர்களுக்கு விபரீதப்பணி அலவன்சு கொடுக்க வேண்டும். ரெயில்வே கேட் கீப்பர்களுக்கு 8 மணி நேர வேலை மட்டும் வழங்க வேண்டும். பெண் கேட் கீப்பர்களுக்கு பகல் நேரப்பணி மட்டும் ஒதுக்க வேண்டும். சீருடை அலவன்சாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். பதவி சீரமைப்பு திட்டத்தில் உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.

பெண் தண்டவாள பராமரிப்பு பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தர வேண்டும். ரெயில்வே கேட் பகுதிகளில் கழிப்பறை வசதி, தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மதுரை கோட்ட டி.ஆர்.இ.யூ. தொழிற்சங்கத்தை சேர்ந்த ரெயில்வே ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story