தஞ்சை பகுதியில் வாழைத்தார் அறுவடை பணி மும்முரம் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை


தஞ்சை பகுதியில் வாழைத்தார் அறுவடை பணி மும்முரம் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 31 July 2018 10:30 PM GMT (Updated: 31 July 2018 8:35 PM GMT)

தஞ்சை பகுதியில் வாழைத்தார் அறுவடை பணி மும்முரமாக நடக்கிறது. விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர்,

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக காவிரி டெல்டா மாவட்டங்கள் விளங்கி வருகின்றன. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இது தவிர கோடை நெல் சாகுபடியும் நடைபெறும். குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். குறிப்பிட்ட நாளில் தண்ணீர் திறக்கப்பட்டால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். அவ்வாறு திறக்காமல் தாமதமாக திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு குறைந்துவிடும்.

ஆனால் 7-வது ஆண்டாக இந்த ஆண்டும் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. இதனால் தஞ்சை மாவட்டத்தில் ஆழ்குழாய் கிணறு மூலம் மட்டுமே குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நெல் சாகுபடியை தவிர வாழை, எள், பருத்தி மற்றும் பயறு வகை பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. வாழையில் மட்டுமே இலை, பூ, காய் மற்றும் பழம் என அதன் அனைத்து பாகங்களும் விவசாயிகளுக்கு வருவாயை ஈட்டி தருவதாக உள்ளது. இதன்காரணமாக விவசாயிகள் ஆர்வத்துடன் வாழை சாகுபடிகளை மேற்கொள்கின்றனர்.

தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு, கும்பகோணம் பகுதிகளில் அதிக அளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கதலி, பூவம், நேந்திரம் ஆகிய ரக வாழைகள் அதிகமாக பயிரிடப்பட்டுள்ளது. தஞ்சையை அடுத்த பள்ளியக்ரஹாரம் பகுதியில் வெண்ணாற்றையொட்டி வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த வாழை மரங்கள் நன்றாக வளர்ந்து காய்கள் காய்த்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. இதனால் விவசாயிகள், வாழைத்தாரை அறுவடை செய்து வருகின்றனர். வாழைத்தாரில் காய்கள் அதிக அளவில், அதுவும் நன்றாக விளைந்து இருந்தாலும் விலை வீழ்ச்சி அடைந்து இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மார்க்கெட்டில் வாழைத்தாருக்கு உரிய விலை இல்லாததால் வியாபாரிகளிடம் தான் வாழைத்தார்களை விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். வியாபாரிகளும் நேரடியாக வயலுக்கு வந்தே வாழைத்தார்களை வாங்கி செல்கின்றனர். திருவையாறை சேர்ந்த விவசாயி வீரமணிக்கு சொந்தமான வயல், பள்ளியக்கிரஹாரத்தில் உள்ளது. இவர், வாழை சாகுபடி செய்து இருந்தார். நேற்று வாழைத்தார் அறுவடை செய்யப்பட்டது. அறுவடை செய்யப்பட்ட வாழைத்தார்களை பண்ருட்டியை சேர்ந்த வியாபாரி நேரில் வந்து வாங்கி சென்றார்.

இது குறித்து விவசாயி வீரமணி கூறும்போது, கடந்த ஆண்டு ஒரு வாழைத்தார், மார்க்கெட்டிலேயே ரூ.500-க்கு எங்களிடம் இருந்து கொள்முதல் செய்தார்கள். ஆனால் இந்த ஆண்டு ரூ.100 வரை தான் வாழைத்தார் விலை போகிறது. இதனால் வியாபாரிகளிடம் நாங்கள் விற்பனை செய்கிறோம். அவர்கள் 160 காய்கள் கொண்ட வாழைத்தாரை ரூ.250-க்கு கொள்முதல் செய்கின்றனர். நான் 6 ஏக்கரில் வாழை சாகுபடி செய்துள்ளேன்.

ஒரு ஏக்கருக்கு ரூ.1½ லட்சம் வரை செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. முதல் அறுவடை நடைபெற்றபோது மார்க்கெட்டில் நல்ல விலை இருந்தது. ஆனால் இப்போது உரிய விலை இல்லை. செலவு செய்த தொகையை திரும்ப கிடைப்பதே பெரிதாக உள்ளது. வாழைத்தார் அறுவடை முடிந்தவுடன் இலை அறுப்புக்கு விட்டுவிடுவோம். இந்த ஆண்டு இலை அறுப்பில் தான் லாபம் கிடைக்கும். ஆழ்குழாய் கிணறு மூலம் தான் சாகுபடி செய்தோம். இப்போது ஆற்றில் வந்துள்ள தண்ணீர் முன்பே வந்திருந்தால் இன்னும் விளைச்சல் நன்றாக இருந்திருக்கும் என்றார்.

பெரும்பாலான இடங்களில் வாழைத்தார்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. ஆடி காற்று வேகமாக வீசுகிறது. காற்றின் வேகத்திற்கு தாக்குப்பிடிக்காமல் வாழைமரங்கள் தாருடன் சாய்ந்துவிட வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதனால் வாழை மரங்களை பாதுகாப்பதற்காக மூங்கில், சவுக்கு கம்புகளை கொண்டு வாழை மரங்களுக்கு முட்டு கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு சிலர் நைலான் டேப் மூலம் வாழை மரங்களை இணைத்து கட்டி பாதுகாத்து வருகின்றனர். அறுவடை செய்யப்படும் நெல்லை கொள்முதல் செய்ய கொள்முதல் நிலையங்கள் ஆங்காங்கே திறக்கப்பட்டுள்ளதை போல வாழைத்தார்களை கொள்முதல் செய்வதற்காக கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும். 

Next Story