பிரபல கொள்ளையன் கொலையில் 2 பேர் சிக்கினர்

சேலம் பொன்னம்மாபேட்டையில் நடந்த பிரபல கொள்ளையன் கொலையில் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 8 ஆண்டுகளுக்கு முன்பு திருட்டு வழக்கில் சிக்க வைத்ததால் கொன்றது அம்பலமாகி உள்ளது.
சேலம்,
சேலம் பொன்னம்மாபேட்டையில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் கடந்த ஜூன் மாதம் 26-ந் தேதி, சுமார் 28 வயதுடைய வாலிபர் ஒருவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் கொலையுண்டவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தினார்கள். மேலும் கொலையாளிகளை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் ஒரு மாதத்திற்கு பின்னர் கொலையானவர் யார்? என்பது தெரியவந்தது.
அதாவது, கொலையுண்டவர் சேலம் மாசிநாயக்கன்பட்டி ஆலமரத்துக்காடு பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி(வயது 28) என்பது தெரியவந்தது. இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன. பிரபல கொள்ளையனான இவர் கடந்த ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இந்த கொலை தொடர்பாக பட்டைக்கோவில் பகுதியை சேர்ந்த பிரியாணி கடை நடத்தி வந்த மணிகண்டன் மற்றும் ஹரி ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பார்த்தசாரதியும், மணிகண்டனும் கூட்டாக இணைந்து திருட்டில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிப்பாளையம் போலீஸ் சரகத்தில் நடந்த ஒரு திருட்டு வழக்கில் பார்த்தசாரதியை போலீசார் கைது செய்தனர். அப்போது போலீசாரிடம் இந்த திருட்டில் மணிகண்டனுக்கு தொடர்பு உள்ளது என்று கூறி உள்ளார். இதையடுத்து அவரையும் போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் தன்னை சிக்க வைத்த பார்த்தசாரதி மீது மணிகண்டனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
இதையடுத்து அவரை கொலை செய்ய முடிவு செய்தார். இதற்கிடையில் வேறு ஒரு வழக்கில் கடந்த ஆண்டு பார்த்தசாரதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் கடந்த ஜூன் மாதம் பார்த்தசாரதி ஜாமீனில் வெளியே வந்தார். இதுபற்றி அறிந்த மணிகண்டன் அவரை கொலை செய்ய திட்டமிட்டார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று மணிகண்டன், பார்த்தசாரதி, ஹரி உள்பட 6 பேர் பொன்னம்மாபேட்டை தண்டவாள பகுதியில் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர். பின்னர் அவர்கள் மதுபோதையில் இருந்த பார்த்தசாரதியின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்தனர். ரெயிலில் அடிபட்டு இறந்ததாக வழக்கை திசை திருப்புவதற்காக அவருடைய உடலை அவர்கள் தண்டவாளத்தில் வீசி சென்றது விசாரணையில் தெரியவந்தது.
மணிகண்டன், ஹரி ஆகியோரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலையில் தொடர்புடைய மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story