ரேஷன் கடைகளுக்கு 100 சதவீதம் பொருட்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும்


ரேஷன் கடைகளுக்கு 100 சதவீதம் பொருட்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 31 July 2018 10:30 PM GMT (Updated: 31 July 2018 10:07 PM GMT)

ரேஷன்கடைகளுக்கு 100 சதவீதம் பொருட்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

நாமக்கல்,

தமிழ்நாடு மாநில தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட பேரவை கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கருப்பண்ணன் வரவேற்று பேசினார். மாவட்ட துணை தலைவர் மாதவன் முன்னிலை வகித்தார்.

இதில் மாநில கவுரவ பொதுச்செயலாளர் குப்புசாமி, முன்னாள் மாநில தலைவர் செல்லமுத்து, மாநில பொருளாளர் சேகர், துணை தலைவர் துரைக்கண்ணு, இணை செயலாளர் செந்தில்குமார் உள்பட பலர் பேசினர்.

கூட்டத்துக்கு பிறகு கவுரவ பொதுச்செயலாளர் குப்புசாமி நிருபர்களிடம் கூறியதாவது:- ரேஷன்கடை பணியாளர்களுக்கு அரசு உரிய ஊதியம் வழங்க வேண்டும். அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் 100 சதவீதம் ரேஷன் பொருட்கள் வழங்க, ஒதுக்கீடும் 100 சதவீதம் செய்ய வேண்டும்.

10 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஓய்வூதியம், கருணை ஓய்வூதியம் ஆகியவற்றை அரசு உடனடியாக வழங்க வேண்டும். சங்க பணியாளர்களுக்கு 31.3.2018 உடன் ஊதிய ஒப்பந்தம் முடிவடைந்து விட்டதால், புதிய ஊதியம் விரைவில் வழங்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் சங்கங்கள் நலிவடைந்த நிலையில் உள்ளது. இதில் அரசு தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சங்கங்களில் நிர்வாகம் இல்லாமலும், தனி அலுவலர் நியமிக்கப்படாமலும் உள்ளதால், மத்திய கூட்டுறவு வங்கியிடம் சேமிப்பு கணக்கு தொடங்கி, பயிர் மற்றும் விவசாய நகைக்கடன் வழங்க காலதாமதம் ஏற்படுகிறது. எனவே பழைய நடைமுறையை பின்பற்ற அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதில் முன்னாள் மாநில இணை செயலாளர் ஜெயப்பிரகாசம், மாவட்ட பொருளாளர் காமராஜ், இணை செயலாளர்கள் வெங்கடேச பெருமாள், ரத்தினம், போராட்டக்குழு தலைவர் மணி, கிழக்கு மண்டல செயலாளர் ராஜமாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story