6 வழி சாலைக்கு நிலம் அளவிட எதிர்ப்பு அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
ஊத்துக்கோட்டை அருகே 6 வழி சாலைக்கு நிலம் அளவிடும் பணிகளுக்கு வந்த அதிகாரிகளை பொதுமக்கள், விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊத்துக்கோட்டை,
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள தச்சூர் கூட்டு சாலையில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் வரை 136 கிலோ மீட்டர் தூரத்துக்கு 6 வழி சாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த சாலை கன்னிகைப்பேர், பெரியபாளையம், தண்டலம், பாலவாக்கம், சென்னங்காரணை, போந்தவாக்கம், சீதஞ்சேரி, வெங்களத்தூர், பிச்சாட்டூர் வழியாக சித்தூர் வரை அமைய உள்ளது. சாலை அமைக்க நிலம் அளவிடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
ஊத்துக்கோட்டை அருகே உள்ள சென்னங்காரணையில் சாலை அமைத்தால் சுமார் 4 கிலோமீட்டர் தூரம் 800 அடி அகலத்தில் விளை நிலங்கள் கையகப்படுத்த வேண்டியிருக்கும். அப்படி நிகழ்ந்தால் 500-க்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். இதனை கருத்தில் கொண்டு தங்கள் கிராமம் வழியாக 6 வழி சாலை அமைக்க கூடாது என்று கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் 2-ந்தேதி அதிகாரிகள் சென்னங்காரணையில் நிலம் அளவிடும் பணியை மேற்கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஒன்று திரண்டு வந்து நிலம் அளவிடும் பணிகளை தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிகாரிகள் நிலம் அளவிடும் பணிகளை பாதியில் நிறுத்தி விட்டு சென்று விட்டனர். இந்த நிலையில் ஓய்வு பெற்ற தாசில்தார் விஜயராகவுலு தலைமையில் அதிகாரிகள் நேற்று மீண்டும் நிலம் அளவிடுவதற்காக சென்னங்காரணை சென்றனர்.
இதையறிந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு நிலம் அளவிடும் பணிகளை மேற்கொள்ளாதபடி அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் அங்கிருந்து திரும்பி சென்றனர்.
Related Tags :
Next Story