கூட்ட நெரிசலை பயன்படுத்தி தி.மு.க. தொண்டர்களிடம் திருடிய 13 பேர் கும்பல் கைது ரூ.42 ஆயிரம் பறிமுதல்


கூட்ட நெரிசலை பயன்படுத்தி தி.மு.க. தொண்டர்களிடம் திருடிய 13 பேர் கும்பல் கைது ரூ.42 ஆயிரம் பறிமுதல்
x
தினத்தந்தி 1 Aug 2018 4:36 AM IST (Updated: 1 Aug 2018 4:36 AM IST)
t-max-icont-min-icon

கூட்ட நெரிசலை பயன்படுத்தி தி.மு.க. தொண்டர்களிடம் திருடிய 13 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

அடையாறு,

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்னை, ஆழ்வார்பேட்டை காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குணமடையவேண்டி ஆயிரக்கணக்கான தி.மு.க. தொண்டர்கள் மருத்துவமனை முன்பாக குவிந்து உள்ளனர்.

இந்த நிலையில் இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி, ஒரு கும்பல் அவர்களிடம் கைவரிசை காட்டி பணத்தையும், விலை உயர்ந்த செல்போன்களையும் குறி வைத்து திருடியிருப்பது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக நேற்று முன்தினம் மயிலாப்பூர் போலீசிடம் 2 பேர் பிடிபட்டனர். போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர்களில் ஒருவர் திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்த ஜீவரத்தினம் (வயது 52) என்பதும், அவர் தனக்கென ஒரு கும்பலை உருவாக்கிக்கொண்டு கூட்ட நெரிசல் உள்ள இடங்களில் திருட்டில் ஈடுபட்டு வருவதும் தெரிய வந்தது.

ஷிப்டு முறையில்...

மேலும், இவர்கள் அனைவரும் சென்னை கோயம்பேட்டில் அறைகள் எடுத்து தங்கி, ஷிப்டு முறையில் காவேரி ஆஸ்பத்திரிக்கு வந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தி.மு.க. தொண்டர்கள் கூட்டத்தில் நுழைந்து நெரிசலை பயன்படுத்தி தொண்டர்களின் பணம், மொபைல் போன், பர்ஸ் ஆகியவற்றை தனது கும்பல் திருடியதை விசாரணையின்போது ஜீவரத்தினம் ஒப்புக்கொண்டார்.

கூட்டத்திற்குள் அருகருகே நின்று திருடிய பணம், பர்ஸ், விலை உயர்ந்த செல்போன்களை மின்னல் வேகத்தில் ஒருவருக்கொருவர் கடத்தி, கடைசியாக அதை வாங்கியவர் தப்பிச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இதனால் முதலில் திருடியவர் யாரிடமும் பிடிபடாத நிலையில் இவர்களின் கைவரிசை ஏராளமானவர்களிடம் தொடர்ந்துள்ளது. இந்த நிலையில்தான் மாறுவேடத்தில் மயிலாப்பூர் கண்காணித்த போலீசாரிடம் ஜீவரத்தினம் சிக்கிக் கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.

சிறையில் அடைப்பு

அப்போது அவர் அளித்த தகவலின் பேரில் கோயம்பேட்டில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்த திண்டுக்கல்லை சேர்ந்த அமீர்பாட்சா (51), சிக்கந்தர் பாட்சா (40), ஜாகீர் உசேன் (39), தங்கராசு (59), சிக்கந்தர் சேட் (44), முசிறியை சேர்ந்த ஆறுமுகம் (43), அண்ணாதுரை (31), ராமநாதபுரத்தை சேர்ந்த முரளி (27), முனியசாமி (29), தஞ்சாவூரை சேர்ந்த நீலகண்டன் (42), வேலூரை சேர்ந்த மணிகண்டன் (32), சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த ராகுல் காந்தி (34) ஆகியோரை மயிலாப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் அலெக்ஸ், பார்த்தசாரதி மற்றும் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.42 ஆயிரம் ரொக்கம் உள்பட ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அவர்கள் மீது மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். பின்னர் 13 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

Next Story