கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி: பெங்களூருவில் சட்டவிரோத விளம்பர பலகைகள் அகற்றம்


கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி: பெங்களூருவில் சட்டவிரோத விளம்பர பலகைகள் அகற்றம்
x
தினத்தந்தி 1 Aug 2018 10:00 PM GMT (Updated: 1 Aug 2018 6:31 PM GMT)

கர்நாடக ஐகோர்ட்டு பிறப்பித்த அதிரடி உத்தரவை அடுத்து பெங்களூருவில் சட்டவிரோத விளம்பர பலகைகள் அகற்றப்பட்டன.

பெங்களூரு,

கர்நாடக ஐகோர்ட்டு பிறப்பித்த அதிரடி உத்தரவை அடுத்து பெங்களூருவில் சட்டவிரோத விளம்பர பலகைகள் அகற்றப்பட்டன.

ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

பெங்களூருவில் சாலையின் முக்கியமான சந்திப்புகள், வாகன ஓட்டிகளின் பார்வைபடும் பகுதிகளில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. சில பகுதிகளில் உரிய அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக அத்தகைய பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. மேலும் மேம்பால சுவர்கள், வீட்டு சுவர்களில் அனுமதி பெறாமல் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில் கர்நாடக ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி தினேஷ் மகேஸ்வரி இதுகுறித்து தாமாக முன்வந்து வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதன் மீது நேற்று ஐகோர்ட்டில் விசாரணை நடைபெற்றது.

பெங்களூரு மாநகராட்சி சார்பில் வக்கீல் ஸ்ரீநிதி ஆஜரானார். அப்போது, தலைமை நீதிபதி தினேஷ் மகேஸ்வரி, பெங்களூருவில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை உடனடியாக அகற்றும்படி மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இன்று(அதாவது நேற்று) மதியத்திற்குள் சட்டவிரோத விளம்பர பலகைகளை அகற்றி அதுபற்றிய விவரங்களை கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதி அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவு நகலை வக்கீல் ஸ்ரீநிதி பெங்களூரு மாநகராட்சி கமி‌ஷனர் மஞ்சுநாத் பிரசாத்துக்கு ‘வாட்ஸ்–அப்‘ மூலம் அனுப்பினார்.

விளம்பர பலகைகளை அகற்றும் பணி

அந்த தகவலை பெற்றுக்கொண்ட கமி‌ஷனர் மஞ்சுநாத் பிரசாத், அதை ‘வாட்ஸ்அப்‘ மூலம் மாநகராட்சியில் உள்ள 8 மண்டலங்களின் துணை கமி‌ஷனர்களுக்கு அனுப்பினார். தங்களின் எல்லை பகுதிகளுக்குள் உள்ள சட்டவிரோத விளம்பர பலகைகளை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கமி‌ஷனர் உத்தரவிட்டார்.

இதையடுத்து அந்த துணை கமி‌ஷனர்கள் மற்ற பணிகளை நிறுத்திவிட்டு சட்டவிரோத விளம்பர பலகைகளை அகற்றும் பணியை தொடங்கினர். நகரின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகளை அகற்றினர். இந்த பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சட்டவிரோத விளம்பர பலகைகள் அகற்றப்பட்டது பற்றிய விவரங்களை 8 மண்டலங்களை சேர்ந்த துணை கமி‌ஷனர்களும், மாநகராட்சி கமி‌ஷனருக்கு தெரிவித்தனர். இந்த தகவல் தலைமை நீதிபதி தினேஷ் மகேஸ்வரியின் கவனத்துக்கும் தெரிவிக்கப்பட்டது.


Next Story