ஈரோடு ரெயில் நிலையத்தில் துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஈரோடு ரெயில் நிலையத்தில் துப்புரவு பணியாளர்கள் ரெயில் நிலையத்தின் 2–வது நடைமேடை பகுதியில் அமர்ந்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு,
ஈரோடு ரெயில் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் 70 துப்புரவு பணியாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களுக்கு தினக்கூலியாக ரூ.330 வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 2 மாதங்களாக ஊதியம் வழங்கப்பட வில்லை என்றும், கடந்த ஒரு ஆண்டாக பிடித்தம் செய்யும் வைப்புத்தொகைக்கான ரசீது வழங்கப்படவில்லை என்றும் கூறி ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் தங்களது வேலைகளை புறக்கணித்து, ஈரோடு ரெயில் நிலையத்தின் 2–வது நடைமேடை பகுதியில் அமர்ந்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்து வந்த அதிகாரிகள், ‘ஊதியம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அனைவருக்கும் கலைந்து, வேலைக்கு செல்லுங்கள்’ என்றனர். அதை ஏற்றுக்கொண்ட துப்புரவு பணியாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.