அருப்புக்கோட்டை வழியாக மதுரை–தூத்துக்குடி அகல ரெயில் பாதைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தாமதம்


அருப்புக்கோட்டை வழியாக மதுரை–தூத்துக்குடி அகல ரெயில் பாதைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தாமதம்
x
தினத்தந்தி 2 Aug 2018 3:15 AM IST (Updated: 2 Aug 2018 2:03 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடிக்கான அகல ரெயில்பாதை பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தாமதம் ஏற்படுவதால் பணிகள் நடைபெறுவது தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே இத்திட்டப்பணிக்கு ரெயில்வே அமைச்சகம் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

விருதுநகர்,

தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரெயில்களை இயக்க வேண்டும் என்றால் இரட்டை ரெயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. இதனால் மதுரை முதல் தூத்துக்குடி, மற்றும் மணியாச்சி முதல் கன்னியாகுமரி வரையிலான இரட்டைப்பாதை திட்டப்பணி 3 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடிக்கு 143.5 கிலோ மீட்டர் தூரம் புதிய அகல ரெயில் பாதை அமைக்கும் திட்டம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் பணி தொடங்கப்பட்டது. பணிக்கு ரூ.800 கோடி வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ரெயில் பாதைக்கான நிலம் கையகப்படுத்தும் பணியினை மாநில வருவாய்த்துறை தான் மாவட்ட அதிகாரிகள் மூலம் செய்து தர வேண்டி உள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணியில் மிகுந்த தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்த அகல ரெயில்பாதை திட்டப்பணியையும் 3 கட்டங்களாக பிரித்து ரெயில்வே நிர்வாகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

முதல் கட்டமாக 18.7 கிலோ மீட்டர் தூர அகல ரெயில் பாதையினை ரூ.100 கோடி மதிப்பீட்டில் மீளவிட்டானில் இருந்து மேலமருதூர் வரை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 2–வது கட்டமாக மேலமருதூரில் இருந்து அருப்புக்கோட்டை வரையிலும், 3–வது கட்டமாக அருப்புக்கோட்டையில் இருந்து மதுரை வரையிலான ரெயில்பாதையினை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக முதல் கட்டமாக 24 ஏக்கர் நிலத்தை தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் ரெயில்வேத்துறையிடம் ஒப்படைத்துள்ளது. இதில் மீளவிட்டான்–மேலமருதூருக்கு இடையில் உள்ள ரெயில் பாதையில் பாலம் கட்டுவதற்கான டெண்டர் தற்போது தான் கோரப்பட்டுள்ளது. முதல் கட்டப்பணியை முடிப்பதற்கே 175.67 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டி உள்ளது. இன்னும் இந்த நிலம் கையகப்படுத்தாத நிலை உள்ளது.

மேலும் ரெயில்வே அமைச்சகமும் இந்த திட்டப்பணிக்கு ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் குறைந்த அளவே நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் இத்திட்டப்பணிக்கு ரூ.20 கோடிதான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதே நிலை நீடித்தால் மதுரை–தூத்துக்குடி அகல ரெயில்பாதை திட்டப்பணி முடிவடைவது எப்போது என்று சொல்ல முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.

இந்த ரெயில்பாதை முடிவடைந்து பயன்பாட்டிற்கு வந்தால் தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரெயில்கள் இயக்கவும், ரெயில்களின் பயண நேரத்தை குறைக்கவும் வாய்ப்பு ஏற்படும். எனவே தென் மாவட்ட எம்.பி.க்கள் மதுரை–தூத்துக்குடி அகலரெயில்பாதை திட்டப்பணியை விரைந்து முடிக்க தேவையான நிதி ஒதுக்கீட்டினை செய்ய வலியுறுத்துவதுடன், மாநில அரசும் நிலம் கையகப்படுத்தும் பணியினை விரைவு படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.


Next Story