குமரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் நடத்தி கோடிக்கணக்கில் பணம் மோசடி தந்தை–மகள் கைது


குமரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் நடத்தி கோடிக்கணக்கில் பணம் மோசடி தந்தை–மகள் கைது
x
தினத்தந்தி 3 Aug 2018 4:45 AM IST (Updated: 2 Aug 2018 9:56 PM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் நடத்தி கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்ததாக தந்தை– மகளை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் பரசேரி அருகே உள்ள நுள்ளிவிளையை சேர்ந்தவர் ஆலிவர் (வயது 58). இவர், கோவையை தலைமையிடமாகக் கொண்ட வீட்டு வசதி கூட்டுறவு சங்கம் ஒன்றின் பெயரில் ராஜாக்கமங்கலத்தை தலைமையகமாக கொண்டு நடத்தி வந்தார். இதன் 15 கிளைகள் மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வந்தன.

ஆலிவர் இந்த நிறுவனத்தின் மண்டல இயக்குனராகவும், அவரது மகள் பவுலின் டோரா (28) மண்டல மேலாளராகவும், மருமகன் தினேஷ் (35) இயக்குனராகவும், ஆலிவரின் நண்பர் பார்த்தசாரதி (55) முதுநிலை ஆலோசகராகவும் செயல்பட்டு வந்தனர். இவர்களில் தினேஷ் தற்போது வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிறுவனம் மக்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

இதற்கிடையே அந்த நிறுவனத்தின் கிளை ஒன்றில் மேலாளராக பணியாற்றிய காரங்காடு அருகே செருப்பன்கோடு பகுதியை சேர்ந்த ரூபின் மனைவி நிஷா நாகர்கோவிலில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:–

ஆலிவர் மற்றும் அவரை சார்ந்தவர்கள் நடத்தி வரும் கூட்டுறவு வீட்டு வசதி சங்க கிளையில் மேலாளர் வேலை காலியாக இருப்பதாகவும், அதில் சேரவேண்டும் என்றால் ரூ.5 லட்சம் தரவேண்டும் என்றும், மாத சம்பளமாக ரூ.15,500 வழங்கப்படும் என்றும் கூறினர்.

இதைத்தொடர்ந்து தானும், என்னுடைய கணவரும் ரூ.5 லட்சம் கொடுத்தோம். பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் நாகர்கோவில் கோட்டார் கிளையில் பணி செய்யுமாறு கூறினர். அதன்பேரில் கோட்டார் கிளைக்கு சென்று நான் பொறுப்பு எடுத்தபோது மாதந்தோறும் 20 பங்குதாரர்களை உறுப்பினர்களாக இந்த கிளையில் கட்டாயம் சேர்க்க வேண்டும் என்றனர்.

இதற்கிடையே, கோவை ஆர்.எஸ்.புரத்தில் இயங்கி வந்த நிறுவனம் பணம் மோசடியில் ஈடுபட்டு கடந்த ஒரு ஆண்டாக செயல்படவில்லை என்பது எனக்கு தெரியவந்தது. அந்த நிறுவனம் குறித்து விசாரித்த போது மத்திய அரசு அனுமதி பெறாதது தெரியவந்தது. அவர்கள் மத்திய அரசு நிறுவனம் என்று கூறி மக்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணத்தை மோசடி செய்து வருகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் ஆலிவர் மற்றும் அவரை சார்ந்தவர்கள் கூட்டுறவு சங்கம் நடத்தி கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆலிவர் மற்றும் அவரது மகள் பவுலின் டோரா ஆகியோரை கைது செய்தனர். பார்த்தசாரதியை போலீசார் தேடி வருகிறார்கள். மேலும் வெளிநாட்டில் பணிபுரியும் தினேசை கைது செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Next Story