10–ம் வகுப்பு மாணவனுக்கு மருந்து இல்லாத ஊசியை போட்ட மர்மநபரால் பரபரப்பு போலீசார் விசாரணை


10–ம் வகுப்பு மாணவனுக்கு மருந்து இல்லாத ஊசியை போட்ட மர்மநபரால் பரபரப்பு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 3 Aug 2018 4:30 AM IST (Updated: 3 Aug 2018 1:25 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் 10–ம் வகுப்பு மாணவனுக்கு மருந்து இல்லாத ஊசியை போட்டு விட்டு சென்ற மர்மநபரால் பரபரப்பு ஏற்பட்டது. உடல் உறுப்புகளுக்காக மாணவனை கடத்துவதற்காக? ஊசி போட்டாரா? என்பது உள்ளிட்ட சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

பெரம்பலூர்,


பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா பிரம்மதேசம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருக்கு திருமணமாகி புஷ்பா என்கிற மனைவியும், சந்துரு (வயது 14), கவுதம் (12) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். சந்துரு பெரம்பலூர் அருகே உள்ள தண்ணீர்பந்தல் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வருகிறான். கவுதம் ஒரு பள்ளியில் 6–ம் வகுப்பு படித்து வருகிறான். விவசாயியான கிருஷ்ணமூர்த்தி கார் ஓட்டும் வேலைக்கு செல்வார். நேற்று முன்தினம் கிருஷ்ணமூர்த்தி கார் ஓட்டுவதற்கு சென்னை சென்று விட்டார்.

நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு சென்ற சந்துரு, மாலையில் பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு திரும்புவதற்காக பஸ்சுக்காக காத்திருந்தான். அப்போது அவன் சிறுநீர் கழிப்பதற்காக அந்தப்பகுதியில் உள்ள இடிந்த கட்டிடத்திற்கு சென்றான். பின்னர் அவன் திரும்பி வந்து கொண்டிருந்தான்.


இந்நிலையில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வெள்ளை நிற சட்டையும், நீல நிற ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்த ஆண் ஒருவர் சந்துருவை வழிமறித்தார். பின்னர் அவர், சந்துருவின் இடது கையில் உள்ள படர்தாமரை பார்த்து இது சரிசெய்யவதற்கு ஒரு ஊசி போட வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கு சந்துரு மறுத்துள்ளான். இந்நிலையில் அந்த நபர் சந்துருவிடம் உன் தந்தை கூறி தான் ஊசி போட வந்தேன் என்றுள்ளார். பின்னர் அவர் உன் தந்தை செல்போனில் பேசுவதாக கூறி போனை சந்துருவிடம் கொடுத்தார்.

அப்போது போனில் மறுமுனையில் பேசிய நபர் ஊசி போட்டுக்கோ டா.. என்று கூறியதாக தெரிகிறது. அப்போது அந்த நபர் திடீரென்று சந்துருவின் இடது கையில் நரம்பில் மருந்து இல்லாத ஊசியை போட்டு விட்டு கொடுத்த செல்போனை பிடுங்கி கொண்டு அங்கிருந்து புறப்பட்டார். இதற்கிடையே ஊருக்கு செல்வதற்கு பஸ் வந்ததால் சந்துருவும் பஸ் ஏறி வீட்டிற்கு சென்றான்.


அப்போது வீட்டில் அவன் தனது தாய் புஷ்பாவிடம் தலை சுற்றுகிறது என்றும், தந்தை கூறியதாக படர்தாமரை சரியாக மருந்து இல்லாத ஊசியை போட்டு விட்டு சென்றதாக கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த புஷ்பா சென்னையில் இருந்த கணவர் கிருஷ்ணமூர்த்திக்கு போன் செய்து மகனுக்கு நீங்கள் ஊசி போட யாராவதையும் அனுப்பினீங்களா? என்று கேட்டார். அதற்கு கிருஷ்ணமூர்த்தி நான் யாரையும் அனுப்பவில்லை. உடனடியாக மகனை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லு என்றார். இதனால் பதறிபோன புஷ்பா தனது மகன் சந்துருவை அழைத்து கொண்டு சிகிச்சைக்காக வாலிகண்டபுரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றார். பின்னர் மேல்சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் மகனை சேர்த்தார். அங்கு சந்துருவுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், மருந்து இல்லாத ஊசியை போட்டால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். சந்துருவை உடனடியாக சிகிச்சைக்கு அழைத்து வந்ததால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார் என்றார்.


இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மருந்து இல்லாத ஊசி போட்டு மாணவனை, மனித உடல் உறுப்புகளுக்காக கடத்தும் கும்பலை சேர்ந்த நபராக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அந்த மாணவன் மீது மருந்து இல்லாத ஊசி போட காரணம் என்ன என்பதும், முன்விரோதம் காரணமா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி அந்த நபரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்பும் பெற்றோர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story