குப்பையில் வீசப்பட்ட மண்டை ஓடுகள், எலும்புகள் நரபலி கொடுக்கப்பட்டதா? போலீசார் தீவிர விசாரணை


குப்பையில் வீசப்பட்ட மண்டை ஓடுகள், எலும்புகள் நரபலி கொடுக்கப்பட்டதா? போலீசார் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 3 Aug 2018 4:30 AM IST (Updated: 3 Aug 2018 3:56 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி கே.கே.நகரில் குப்பையில் வீசப்பட்ட நிலையில் மண்டை ஓடுகள், எலும்புகள் கிடந்தன. அவை மந்திரவாதிகளால் நரபலி கொடுக்கப்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்சி,

திருச்சி கே.கே.நகர் சுப்பிரமணியநகர் பகுதியில் மாநகராட்சி குடிநீரேற்று நிலையம் உள்ளது. அதன் அருகில் பொதுமக்களால் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. நேற்று காலை நீரேற்று நிலையத்தில் தண்ணீர் திறந்து விடுவதற்காக மாநகராட்சி ஊழியர்கள் சிலர் வந்தனர்.

அப்போது குப்பைகள் கொட்டப்பட்ட இடத்தில் ஒரு பெரிய துணிப்பை கிடந்தது. மாநகராட்சி ஊழியர்கள் பைக்குள் என்ன இருக்கிறது என்ற ஆர்வத்தில் அதை திறந்து பார்த்தனர். அதில் 4 மனித மண்டை ஓடுகள், கை, கால்களின் எலும்புகள் இருந்தன. அவற்றில் ஒரு மண்டை ஓட்டின் நெற்றி பொட்டில் குங்குமம் வைக்கப்பட்டிருந்தது. அதைப்பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் அப்பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. உடனடியாக அங்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

குப்பைகள் கொட்டப்பட்ட இடத்தில் தினமும் காலை வேளையில் மாநகராட்சி வாகனம் மூலம் குப்பைகள் அகற்றப்பட்டு வருமாம். எனவே, குப்பையோடு குப்பையாக கொண்டு செல்லப்பட்டு விடும் என்ற எண்ணத்தில், நள்ளிரவு வேளையில் மண்டை ஓடுகள், எலும்புகளுடன் கூடிய பையை மர்ம நபர்கள் யாரேனும் வீசிச்சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது. இதுகுறித்து கே.கே.நகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகளை பார்வையிட்டனர்.

மந்திரவாதிகள் யாரேனும் பில்லி, சூனியம் மற்றும் செய்வினை போன்ற காரியங்களுக்கு பயன்படுத்தி விட்டு, அவற்றை வீசிச்சென்றிருக்கலாம் அல்லது மந்திரவாதிகளால் நரபலி கொடுக்கப்பட்டவர்களின் மண்டை ஓடுகளை பதுக்கி வைத்து விட்டு யாரேனும் வீசிச்சென்றிருக்கலாம் என்ற அச்சமும் நிலவி வருகிறது. இதற்கிடையே ஆராய்ச்சி கூடத்தில் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த மண்டை ஓடுகள், அதன் பயன்பாடு தேவையில்லை என்பதால் குப்பையில் போட்டு சென்றிருப்பார்களோ? என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. கே.கே.நகர் போலீசார் மண்டை ஓடுகள், எலும்புகளை எடுத்துச்சென்று விசாரித்து வருகிறார்கள்.

குப்பையில் வீசப்பட்ட மண்டை ஓடுகள், எலும்புகள் பற்றிய மர்மம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

Next Story