கடைமடை பகுதிகளுக்கு முறைவைக்காமல் தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாயிகள் சாலை மறியல்


கடைமடை பகுதிகளுக்கு முறைவைக்காமல் தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாயிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 3 Aug 2018 4:15 AM IST (Updated: 3 Aug 2018 3:16 AM IST)
t-max-icont-min-icon

கடைமடை பகுதிகளுக்கு முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விடக்கோரி பேராவூரணியில், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 126 பேரை போலீசார் கைது செய்தனர்.

பேராவூரணி,

கடைமடை பகுதிகளுக்கு முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விட வேண்டும், பாசன வாய்க்கால்களை முறையாக தூர்வாரி ஏரி, குளங்களை நிரப்ப வேண்டும். நிபந்தனை இன்றி விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க வேண்டும். இதுவரை பயிர்க்காப்பீட்டு இழப்பீடு வழங்காத விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பேராவூரணி பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய பொறுப்பாளர்கள் பேராவூரணி ஏ.ராமலிங்கம், சேதுபாவாசத்திரம் வி.நீலகண்டன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்டக்குழு உறுப்பினர் வக்கீல் வீ.கருப்பையா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றியச்செயலாளர்கள் ஏ.வி.குமாரசாமி, ஆர்.எஸ்.வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சங்க நிர்வாகிகள் ஆவாண், ரெங்கசாமி, மாணிக்கம், இந்துமதி, ஏ.ராஜாமுகமது, பி.கோவிந்தராஜூ, நாம் தமிழர் கட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளர் திலீபன், காங்கிரஸ் கட்சி வட்டார தலைவர் ஷேக் இப்ராகீம், குருவிக்கரம்பை சம்பத், முடச்சிக்காடு தி.மு.க. ஊராட்சி செயலாளர் சுப.அருணகிரி, மற்றும் வாத்தலைக்காடு, அம்மையாண்டி, பின்னவாசல், ஒட்டங்காடு, மருங்கப்பள்ளம், கழனிவாசல், கொரட்டூர், பெரியகத்திக்கோட்டை பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பேராவூரணி தாசில்தார் எல்.பாஸ்கரன், தஞ்சை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகர், இன்ஸ்பெக்டர்கள் ஜனார்த்தனன் (பேராவூரணி), செந்தில்குமரன்(திருச்சிற்றம்பலம்), வருவாய் ஆய்வாளர் அஷ்ரப் அலி, கிராம நிர்வாக அலுவலர்கள் முத்துக்கிருஷ்ணன், சங்கீதா மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 126 பேரை போலீசார் கைது செய்து அந்த பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அங்கு வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கடைமடை பகுதிக்கு முறை வைக்காமல் தண்ணீர் விடப்படும் என உறுதி யளித்தனர். 

Next Story