மின்சாரம் சேமிப்பு, தண்ணீர் வீணாகுவதை தடுக்க வேட்டைக்காரன்புதூர் கால்வாயில் நுண்ணீர் பாசன திட்டத்தை செயல்படுத்த வேண்டும், விவசாயிகள் மனு


மின்சாரம் சேமிப்பு, தண்ணீர் வீணாகுவதை தடுக்க வேட்டைக்காரன்புதூர் கால்வாயில் நுண்ணீர் பாசன திட்டத்தை செயல்படுத்த வேண்டும், விவசாயிகள் மனு
x
தினத்தந்தி 4 Aug 2018 4:15 AM IST (Updated: 4 Aug 2018 12:22 AM IST)
t-max-icont-min-icon

மின்சாரம் சேமிப்பு மற்றும் தண்ணீர் வீணாகுவதை தடுக்க வேட்டைக்காரன்புதூர் கால்வாயில் நுண்ணீர் பாசன திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு நீர்வளர்ச்சி குழும துணை தலைவர் இளங்கோவனிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணையில் இருந்து புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதை தவிர அணை மூலம் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படுகிறது. ஆழியாறு அணை புதிய ஆயக்கட்டு பாசனத்தில் 42 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இதன் மூலம் பொள்ளாச்சி கால்வாய், வேட்டைக்காரன்புதூர் கால்வாய், ஆழியாறு ஊட்டுக் கால்வாய், சேத்துமடை கால்வாய் பாசன விவசாயிகள் பயன்பெறுகின்றனர். 2 மண்டலங்களாக பிரித்து பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் கால்வாய் சேதம், தண்ணீர் திருட்டு போன்ற காரணங்களால் கடை மடை விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை.

இந்த நிலையில் வேட்டைக்காரன்புதூர் கால்வாயில் நுண்ணீர் பாசன திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு நீர் வளர்ச்சி குழும துணை தலைவர் இளங்கோவனிடம், ஒடையகுளம் கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் விக்ரம் முத்து ரத்தினசபரி மற்றும் விவசாயிகள் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

பொள்ளாச்சி தாலுகா கோட்டூர், காளியாபுரம், வேட்டைக்காரன்புதூர், ஒடையகுளம், மார்ச்சநாயக்கன்பாளையம் வருவாய் கிராமங்களில் உள்ள பாசன நிலங்களுக்கு பி.ஏ.பி. பாசன திட்டத்தின் கீழ் தண்ணீர் வழங்கப்படுகிறது. ஆழியாறு படுகை புதிய ஆயக்கட்டு பாசனத்தில் வேட்டைக்காரன்புதூர் கால்வாய் மூலம் 11 ஆயிரத்து 181 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. இதில் ஏ, பி என இரு மண்டலங்களாக பிரித்து 2 ஆண்டிற்கு ஒரு முறை பாசனம் பெறுகிறது. தற்போது புதிய முறையான உயர் அழுத்த குழாய் வழி பாசன திட்டத்தின் மூலம் வேட்டைக்காரன்புதூர் கால்வாயை முற்றிலும் நுண்ணீர் பாசன முறைக்கு மாற்றி அமைக்கவும், தானியங்கி முறை பாசனத்திற்கு வழிவகை செய்ய நடவடிக்கை வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இதுகுறித்து ஒடையகுளம் கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் விக்ரம் முத்து ரத்தினசபரி கூறியதாவது:–

வேட்டைக்காரன்புதூர் கால்வாய் மூலம் 11 ஆயிரத்து 181 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இதில் ஏ மண்டலத்தில் 5,588 ஏக்கரும், பி மண்டலத்தில் 5,623 ஏக்கரும் பாசனம் பெறுகின்றன. ஆண்டுதோறும் அணையின் நீர்இருப்பை கணக்கிட்டு தண்ணீர் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் கால்வாய் சேதம், தண்ணீர் திருட்டு போன்ற காரணங்களால் கடைமடை வரைக்கும் தண்ணீர் கிடைப்பதில்லை. எனவே கால்வாய்க்கு பதிலாக இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் குழாய் அமைத்து நுண்ணீர் பாசன திட்டத்தை செயல்படுத்த கோரி தமிழக முதல்–அமைச்சருக்கு மனு அனுப்பப்பட்டு உள்ளது. விவசாயிகள் ஆதரவு அளித்தால் இதுபோன்ற திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்த முன் வரும். இந்த திட்டத்தை மேற்கொள்ள ரூ.120 கோடி வரை செலவாகும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

5 ஆயிரம் ஏக்கருக்கு சுமார் 8 ஆயிரத்து 500 குதிரை திறன் கொண்ட மோட்டார்கள் பயன்படுத்தப்படுகின்றன. நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தப்பட்டால் மின்சாரம் தேவைப்படாது. இதனால் மின்சாரம் சேமிக்கப்படும். இந்த தொகையை கொண்டு திட்டத்தை செயல்படுத்த முடியும். திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் 100 சதவீதம் மானியம் வழங்க வேண்டும். தற்போது கால்வாய் சேதம், தண்ணீர் திருட்டு போன்றவற்றினால் 50 சதவீதம் நீர் இழப்பு ஏற்படுகிறது. இதே திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால் அனைத்து விவசாயிகளுக்கும் ஒரே அளவு தண்ணீர் கிடைக்கும்.

தண்ணீர் திருட்டு மற்றும் தண்ணீர் மாசுபடுவது தடுக்கப்படும். மேலும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கால்வாயை சீரமைக்க நிதி ஒதுக்க வேண்டிய அவசியம் இருக்காது. விளைப்பொருட்கள் உற்பத்தியும் அதிகரிக்கும். இதன் மூலம் விவசாயிகளின் பொருளாதாரமும், வாழ்வாதாரமும் உயரும். நுண்ணீர் பாசனத்தில் போதிய தண்ணீர் கிடைப்பதால் ஆள்துளை கிணறு, கிணறுகளில் உள்ள தண்ணீர் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் பாதுகாக்க முடியும். இந்த தண்ணீர் வறட்சி காலங்களில் பயன்படுத்தி கொள்ளலாம். நுண்ணீர் பாசன திட்டம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story