கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடிய 38 பேர் கைது


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடிய 38 பேர் கைது
x
தினத்தந்தி 4 Aug 2018 9:45 AM IST (Updated: 4 Aug 2018 9:45 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடிய 38 பேர் கைது செய்யப்பட்டனர்.

பர்கூர்,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடிய 38 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 53 ஆயிரத்து 880, 15 மோட்டார்சைக்கிள்கள், 26 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கந்திகுப்பம், சந்தூர் பகுதிகளில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவருடைய உத்தரவின் பேரில் கிருஷ்ணகிரி பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கோகிலா மற்றும் போலீசார் கந்திகுப்பம் முருக்கம்பள்ளம் ராம் நகர் பகுதியில் அதிரடியாக சோதனை நடத்தினார்கள்.

அப்போது அந்த பகுதியில் உள்ள மாந்தோப்பில் பெரிய அளவில் ஷெட்டுகள் அமைத்து பணம் வைத்து சூதாட்டம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பணம் வைத்து சூதாடியதாக எலத்தகிரி ராம்நகர் சீனிவாசன் (வயது 29), வரட்டனப்பள்ளி கீழ் தெரு கணேஷ்குமார் (38), சரவணன் (40), செந்தில் குமார் (38), ரங்கன் (42), பிரபு (30), பர்கூர் மேல் தெரு முனுசாமி (42), பாலக்கோடு கொண்டசாமஹள்ளி மாணிக்கம் (45) உள்ளிட்ட 26 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 53 ஆயிரத்து 80, 15 மோட்டார்சைக்கிள்கள், 26 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களை போலீசார் கிருஷ்ணகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக திருப்பத்தூரை சேர்ந்த முருகன், லட்சுமிபுரம் கமலநாதன் ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

பாரூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சம்பூர்ணம் மற்றும் போலீசார் கரமூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடியதாக அதே பகுதியை சேர்ந்த செந்தில் (32), சாந்தனூர் சிவஞானம் (37), வையம்பட்டி மகேந்திரன் (27), காமலாபுரம் சசிகுமார் (41), குண்டனூர் பிரதாப் (27), அருள் (28) ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.500 பறிமுதல் செய்யப்பட்டது.

போச்சம்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வசந்தி மற்றும் போலீசார் சந்தூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடியதாக அதே பகுதியை சேர்ந்த குணசேகரன் (48), கெங்கவரம் சரவணன் (42), முருகன் (39), சீனிவாசன் (29), சந்தூர் விஸ்வநாதன் (51), ராதாகிருஷ்ணன் (36) ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.300 பறிமுதல் செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய சோதனையில் பணம் வைத்து சூதாடியதாக 38 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.1 லட்சத்து 53 ஆயிரத்து 880, 15 மோட்டார்சைக்கிள்கள், 26 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Next Story