காவிரி கரையோர பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாட்டம் - திரளான பெண்கள், புதுமண தம்பதிகள் குவிந்தனர்


காவிரி கரையோர பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாட்டம் - திரளான பெண்கள், புதுமண தம்பதிகள் குவிந்தனர்
x
தினத்தந்தி 4 Aug 2018 11:36 AM IST (Updated: 4 Aug 2018 11:36 AM IST)
t-max-icont-min-icon

காவிரி கரையோர பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது. இதனால் காவிரி கரையோர பகுதிகளில் திரளான பெண்கள், புதுமண தம்பதிகள் குவிந்தனர்.

குளித்தலை,

காவிரி ஆறு புண்ணிய நதிகளில் ஒன்றானது. காவிரி கரையோர பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. காசிக்கு நிகராக போற்றப்படும் குளித்தலை கடம்பவனேசுவரர் கோவிலின் எதிரே உள்ள கடம்பந்துறை காவிரி ஆற்றங்கரையில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு விழா அன்று திரளான பெண்கள், புதுமண தம்பதிகள், பொதுமக்கள் குவிந்து பூஜைகள் நடத்தி வழிபடுவார்கள். அதன்படி நேற்று ஆடிப் பெருக்கு விழாவையொட்டி அதிகாலையிலேயே கடம்பந்துறை காவிரி ஆற்றங்கரையில் பெண்கள் மற்றும் புதுமண தம்பதிகள் தங்கள் குடும்பத்தினருடன் வந்திருந்தனர்.

பெண்கள் குழுவாக பிரிந்து தங்களுக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டு அந்த இடத்தை சுத்தம் செய்து காவிரி பெருகிவர காரணமான விநாயகரை வழிபடும் வகையில் மணலால் பிள்ளையார் பிடித்து வைத்தனர். பின்னர் வாழையிலையை விரித்து அதில், வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், தேங்காய், மஞ்சள், குங்குமம், காதோலை கருகமணி, காப்பரிசி, விளாங்கனி, நாவற்பழம், பூக்கள் போன்றவற்றை வைத்து பூஜை செய்தனர்.

இதன்பின்னர் அனைத்து பெண்களும் தங்கள் கழுத்திலும், ஆண்கள் கைகளிலும் மஞ்சள் கயிறு கட்டிக்கொண்டனர். புதுமண தம்பதிகள் மஞ்சள் கயிறு மாற்றிக்கொண்டனர். பூஜைகள் முடித்தபின்னர் மணலால் செய்யப்பட்ட பிள்ளையார், அவருக்கு படைக்கப்பட்ட காதோலை கருகமணி உள்ளிட்டவற்றை இலையில் வைத்து ஆரத்தி எடுத்து காவிரி ஆற்றில் விட்டு வழிபட்டனர். புதுமண தம்பதிகள் திருமணத்தின்போது தாங்கள் அணிந்திருந்த மாலைகளை காவிரி ஆற்றில் விட்டு வழிபட்டனர். காவிரி ஆற்றால் வளம் செழிக்கவேண்டும் என விவசாயிகள் காவிரியை வணங்கி வழிபட்டனர். சிலர் முளைப்பாரி எடுத்துவந்து காவிரி ஆற்றங்கரையில் வைத்து பூஜைகள் செய்து ஆற்றில் விட்டு வழிபட்டனர்.

பின்னர் கடம்பவனேசு வரர் கோவிலுக்கு சென்று சிவபெருமானை வழிபட்டனர். கடந்த 2017-ம் ஆண்டு காவிரியில் தண்ணீர் செல்லாத காரணத்தால் பல பெண்கள் தங்கள் வீடுகளிலேயே பூஜைகள் நடத்தினர். இந்த ஆண்டு நீர் நிரம்பி காணப்படும் காவிரியில் குடும்பத்தினருடன் திரளானோர் குளித்து மகிழ்ந்தனர்.

ஆடிப்பெருக்கையொட்டி குளித்தலை கடம்பவனேசுவரர் மற்றும் அய்யர்மலை ரெத்தினகிரீசுவரர் கோவிலில் இருந்து அஷ்டரதேவர்கள் கடம்பந்துறை காவிரி ஆற்றுக்கு கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பின்னர் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு புனித நீராடினர்.

இதேபோல் மாயனூரில் ஆயிரக்கணக்கான மக்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தும் காவிரி ஆற்றில் நீராடி வழிபாடு நடத்தினர். நேற்று காலையில் இருந்தே புதுமண தம்பதிகள் தங்கள் உறவினர்களுடன் வந்து திருமணத்தின் போது அணிந்திருந்த மாலைகளை ஆற்றில் விட்டு பின் நீராடி கரையில் பசு மாட்டு சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து அதற்கு அருகம்புல் சொருகி, திருநீறு, சந்தனம், செந்தூரம் இட்டு பூக்கள் தூவி, வாழை இலையில் தேங்காய் உடைத்து வைத்தும், பழம், பத்தி, சூடம் உள்ளிட்ட பூஜை பொருட் களை கொண்டும், மஞ்சளில் நனைக்கப்பட்ட கயிறை வைத்தும் வழிபட்டனர்.

பின்னர் அந்த மஞ்சள் கயிற்றை எடுத்து புதுமண பெண்ணிற்கு சுமங்கலி பெண் அணிவித்தார். மணமகனுக்கு கையில் மஞ்சள் கயிற்றை கட்டி விட்டனர். இதேபோல் பல்வேறு பகுதிகளில் இருந்து கன்னிப்பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து ஆற்றில் விட்டு தங்களுக்கு பிடித்தமான கணவன் அமைய வேண்டி வழிபாடு செய்தனர். சுமங்கலி பெண்கள் தங்கள் கணவர்களுக்கு நீண்ட ஆயுள் வேண்டி பூஜைகள் செய்து, மஞ்சள் கயிற்றை அணிந்து கொண்டனர். பின்னர் அங்குள்ள செல்லாண்டியம்மன் கோவிலுக்கு சென்று அம்மனை வழிபட்டு அருகில் உள்ள அம்மா பூங்காவிற்கு சென்றனர். ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு நேற்று காலையில் இருந்தே மாயனூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து கார்கள், வேன்கள், மோட்டார் சைக்கிள்கள் என பலவற்றிலும் மக்கள் செல்லாண்டியம்மன் கோவில் பகுதிக்கு சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அதிகமான மக்கள் கூடும் இடம் என்பதால் மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்திருந்தது. அதன்படி குளித்தலை போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமார் தலைமையில், மாயனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிசந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் கலைமணி மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆற்றில் குளிக்கும் போது பொதுமக்கள் ஆழமான பகுதிக்கு சென்று அசம்பாவிதம் ஏற்பட்டால் உடனடியாக காப்பாற்றும் பொருட்டு அந்த பகுதியில் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருந்தனர். இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் நேற்று அங்கு வந்து நேரிடையாக பார்வையிட்டார்.

ஏற்கனவே கரைபுரண்டு ஓடிய நீரை காண வரும் பொதுமக்கள் கதவணை அருகே சிறுவர் பூங்கா பகுதிக்கு சென்று ஆற்றில் இறங்கக்கூடும் என்பதால் பொதுப்பணித்துறையினர் சிறுவர் பூங்காவை பூட்டி அந்த பகுதிக்கு செல்வதை தடை செய்து விட்டனர். மேலும் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே ஆற்றில் இறங்கி பொதுமக்கள் குளிக்க காவல் துறையினர் அனுமதி அளித்தனர். இதனால் எந்தவித அசம்பாவிதமும் இன்றி பொதுமக்கள் வழிபாடு நடத்தி சென்றனர்.

இதேபோல் தவுட்டுப்பாளையம், நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, கோம்புப்பாளையம் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா நடைபெற்றது. தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் குலதெய்வ கோவில்களில் உள்ள பழைய ஆயுதங்களை காவிரி ஆற்றிற்கு கொண்டு வந்து ஆயுதங்களை சுத்தம் செய்து ஆயுதங்களுக்கு விபூதி மற்றும் சந்தனம், குங்குமம் வைத்து தாரை தப்பட்டைகள் முழங்க குலதெய்வங்களை வழிபட்டனர். மேலும் தவுட்டுப்பாளையத்தில் உள்ள காவிரி ஆற்றில் ஏராளமானோர் புனித நீராடினர்.

Next Story