திருச்சியை சேர்ந்த 116 பேரிடம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி - நிதிநிறுவன அதிபர் உள்பட 3 பேர் மீது வழக்கு


திருச்சியை சேர்ந்த 116 பேரிடம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி - நிதிநிறுவன அதிபர் உள்பட 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 4 Aug 2018 1:02 PM IST (Updated: 4 Aug 2018 1:02 PM IST)
t-max-icont-min-icon

வாகனம் வழங்க கவர்ச்சிகர திட்டம் அறிவித்து திருச்சியை சேர்ந்த 116 பேரிடம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக நிதிநிறுவன அதிபர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருச்சி,

திருச்சி சங்கிலியாண்டபுரம் அண்ணாநகரை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது30). இவர் திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனர்(குற்றம்- போக்குவரத்து) மயில்வாகனனை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வேலூரை சேர்ந்தவர் முகமது அப்பாஸ்கான். இவர், ‘பொன்கிராம் எண்டர்பிரைசஸ்’ என்ற பெயரில் திருச்சி தில்லைநகரில் நிதிநிறுவனம் நடத்தி வருகிறார்.

சமீபத்தில் தனது நிதிநிறுவனம் மூலம் இருசக்கர வாகனம், 4 சக்கர வாகனம் வாங்க விரும்புபவர்களுக்கு கவர்ச்சிகரமான திட்டம் ஒன்றை அறிவித்தார். அதாவது, மோட்டார் சைக்கிள், கார் வாங்க ஆசைப்படுபவர்களுக்கு, தங்களது நிறுவனம் 50 சதவீத சலுகையில் புதிய வாகனங்களை வழங்குவதாகவும், அதற்கான தொகையை முன்பணமாக நிதிநிறுவனத்தில் செலுத்தினால் குறிப்பிட்ட நாளில் வாகனங்கள் தரப்படும் என்று அறிவித்தார். அந்த திட்டத்தை பிரபலப்படுத்தும் வகையில் முகமது அப்பாஸ்கானுக்கு உடந்தையாக அம்ஜித்கான், ஜாபா ஆகியோரும் இருந்தனர்.

புதிய வாகனம் 50 சதவீத தொகையில் கிடைக்கிறதே என்ற ஆசையில் நானும்(மணிகண்டன்) மற்றும் என்னைப்போல 115 பேர், முகமது அப்பாஸ்கான் நடத்தும் நிதிநிறுவனத்தில் கோடிக்கணக்கான ரூபாய் டெபாசிட் செலுத்தினோம். ஆனால், அவர் சொன்னபடி இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள் கொடுக்கவில்லை. கட்டிய பணத்தை திரும்ப கேட்டும் கொடுக்காமல் தலைமறைவாகி விட்டனர்.

எனவே, எங்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்து விட்டு தப்பிய நிதிநிறுவன அதிபர் உள்ளிட்ட 3 பேர் மீதும் நடவடிக்கை எடுத்து எங்கள் பணத்தை மீட்டுத்தர வேண்டுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இது குறித்து திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க துணை கமிஷனர் மயில்வாகனன் உத்தரவிட்டார். அதன்பேரில், கோடிக்கணக்கான ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக வேலூர் நிதிநிறுவன அதிபர் முகமது அப்பாஸ்கான் மற்றும் மோசடிக்கு உடந்தையாக இருந்த அம்ஜித்கான், ஜாபா ஆகிய 3 பேர் மீதும் 406, 420 ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story