தொட்டியம், முசிறி பகுதி காவிரி ஆற்றில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாட்டம்


தொட்டியம், முசிறி பகுதி காவிரி ஆற்றில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 4 Aug 2018 1:17 PM IST (Updated: 4 Aug 2018 1:17 PM IST)
t-max-icont-min-icon

தொட்டியம், முசிறி பகுதி காவிரி ஆற்றில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது.

தொட்டியம்,

ஆடிப்பெருக்கை முன்னிட்டு தொட்டியம் காவிரிஆற்றில் நேற்று காலை திரு மணமான பெண்கள் தங்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைத்து நிற்கவும், கன்னி பெண்கள் விரைவில் தங்களுக்கு திருமணம் நடைபெற வேண்டியும் காவிரி தாய்க்கு பூஜை நடத்தி வழிபட்டனர்.

திருமணமான பெண்கள் தங்களது மாங்கல்யத்தை பூஜையில் வைத்தும், திருமணமாகாத பெண்கள் விரைவில் திருமணம் நடைபெற வேண்டி முளைப்பாரி, காதோலை கருகமணி, மஞ்சள் கயிறு, வாளாஅரிசி, வெல்லம் மற்றும் அன்னாசி, ஆரஞ்சு, ஆப்பிள், திராட்சை, பேரிக்காய், நாவல் போன்ற பழ வகைகளை வைத்து காவிரித்தாயை வணங்கி சிறப்பு வழிபாடு நடத்தினார்கள்.

தீர்க்க சுமங்கலிகள் திருமணமான பெண்களுக்கு மாங்கல்யம் அணிவித்தும், திருமணமாகாத பெண்களுக்கு கைகளில் மஞ்சள் கயிறு கட்டியும் வாழ்த்தினார்கள். திருமணமான புதுமண தம்பதிகள் திருமணத்தின் போது அணிந்திருந்த மணமாலைகளை காவிரி ஆற்றில் விட்டு புனித நீராடினார்கள்.

இதேபோல் ஆடிப் பெருக்கை முன்னிட்டு தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவிலில் புறப்பாட்டு (உற்சவ)அம்மன் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. தொட்டியம் முடக்கு சாலையில் உள்ள பாம்பலாயி அம்மன் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருஈங்கோய்மலை மரகதாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமியை தரிசனம் செய்தனர். இதில் தொட்டியம் மற்றும் அதனை சுற்றியுள்ள வரதராஜபுரம், திருநாராயணபுரம், மகேந்திரமங்கலம், சீனிவாசநல்லூர், மணமேடு, கொளக்குடி, அலகரை, ஏலூர்பட்டி, அலகரை ஆகிய பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் கலந்து கொண்டனர்.

இதேபோல் முசிறி பரிசல்துறை காவிரி ஆற்றில் ஏராளமான பெண்கள் ஆடிப் பெருக்கு விழாவை முன்னிட்டு புனிதநீராடி சுமங்கலி பூஜை நடத்தி காவிரி தாயை வழிபட்டனர். புதுமண தம்பதிகள் மற்றும் பெண்கள் வயதான மூத்த பெண்களிடம் மஞ்சள் கயிறுகளை கட்டி கொண்டு ஆசிபெற்றனர். ஆண்களும் தங்களது கையில் மஞ்சள் கயிறுகளை கட்டி கொண்டனர்.

மேலும் தாங்கள் கொண்டுவந்த முளைப்பாரி, திருமணத்தின்போது அணிந்திருந்த மாலைகள் ஆகியவற்றை காவிரி ஆற்றில் விட்டனர். விவசாயிகள் நெல் மற்றும் தானியங்கள், சீர்வரிசை பொருட்கள் ஆகியவற்றை காவிரி ஆற்றில் விட்டு விவசாயம் செழிக்க வேண்டி கொண்டனர். காவிரி ஆற்றில் தண்ணீர் வருவதால் பொதுமக்கள் ஆடிப்பெருக்கு விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். இதையொட்டி முசிறி காவிரி ஆற்றில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முசிறி தீத்தடுப்பு மற்றும் மீட்பு படையினர் காவிரி ஆற்றில் பாதுகாப்பு உபகரணங்களுடன் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.

ஆடிப்பெருக்கை முன்னிட்டு முக்கொம்பு சுற்றுலா மையத்தில் நேற்று ஏராளமானபேர் வந்து இருந்தனர். அவர்கள் அங்கு உள்ள பாலத்தில் நின்று காவிரி தாயை வழிபட்டனர். ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்ததால் அங்கு பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. புதுமணத்தம்பதிகள் தங்களது திருமண மாலைகளை பாலத்தின் மேல்நின்று ஆற்றில் வீசினர்.

Next Story