மதுரை அருகே பரபரப்பு: நெல்லில் விஷம் கலந்து 43 மயில்கள் சாகடிப்பு
மதுரை அருகே 43 மயில்கள் விஷம் வைத்து கொத்துக்கொத்தாக சாகடிக்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை,
மதுரை அருகே உள்ள ஒத்தக்கடை யானைமலையில் அதிக எண்ணிக்கையில் மயில்கள் உள்ளன. இந்த மயில்கள் யானைமலையை சுற்றியுள்ள தமிழ்நாடு விவசாய கல்லூரி, கொடிக்குளம், மருதங்குளம், நெல்லியேந்தல்பட்டி, மலையாளத்தான்பட்டி ஆகிய கிராமப்பகுதிகளில் சுற்றி திரிகின்றன. இரவு நேரங்களில் கொடிக்குளம் கண்மாய், விவசாய கல்லூரி அருகே உள்ள தென்னைந்தோப்புகளில் தஞ்சம் அடைகின்றன.
இந்த நிலையில் நேற்று காலை கொடிக்குளம் வரத்துக் கால்வாய் பகுதியில் ஏராளமான மயில்கள் இறந்து கிடந்தன. இதனைப் பார்த்து அந்த வழியாக சென்ற ஒரு மூதாட்டி அதிர்ச்சி அடைந்து அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதுதொடர்பாக போலீசார் மற்றும் வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
உடனடியாக வன அலுவலர் ஆறுமுகம் தலைமையில் வன அலுவலர்கள், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அவர்கள் கொடிக்குளம் கண்மாய் வரத்து கால்வாய் மருதங்குளம் பகுதி முழுவதும் சென்று பார்த்தனர். அப்போது ஆங்காங்கே மயில்கள் கொத்துக்கொத்தாக இறந்து கிடந்தன. சில மயில்களுக்கு அருகே நெல் சிதறி கிடந்தது.
மொத்தம் இறந்து கிடந்த 43 மயில்களையும், அருகில் சிதறி கிடந்த நெல்லையும் வன அலுவலர்கள் சேகரித்தனர். அந்த இடத்தில் துர்நாற்றம் வீசியதால் இந்த மயில்கள் நேற்று முன்தினம் மாலையே இறந்திருக்கலாம் என்று தெரிகிறது.
இறந்த மயில்களின் உடலை பரிசோதனை செய்வதற்காக மாநகராட்சி நீச்சல் குளம் அருகில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரிக்கும், நெல் ஆய்வுக்கூடத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டன. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் நெல்லில் விஷம் கலந்து மயில்கள் சாகடிக்கப்பட்டு இருக்கலாம் என தெரியவருகிறது.
இது குறித்து வன அலுவலர் ஆறுமுகம் நிருபர்களிடம் கூறியதாவது:–
9 ஆண் மயில்கள், 34 பெண் மயில்கள் என மொத்தம் 43 மயில்கள் இறந்துள்ளன. இன்னும் மயில்கள் இறந்து கிடக்கிறதா என அந்த பகுதி முழுவதும் ஆய்வு செய்து வருகிறோம். மயில்கள் இறந்து கிடந்த பகுதியில் ஆங்காங்கே நெல் கிடந்தது. எனவே அதனை தின்றதால் தான் மயில்கள் இறந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.
மயில்களின் உடலை பரிசோதனை செய்து அறிக்கை வந்தவுடன்தான் அதற்கான காரணம் தெரியவரும். இறந்த மயில்களின் உடலில் கலந்த விஷமும், நெல்லில் கலக்கப்பட்ட விஷமும் ஒன்றாக இருக்கும்பட்சத்தில், நெல்லில் விஷம் வைத்து சாகடிக்கப்பட்டது என்பதனை உறுதி செய்ய முடியும். உடல் பரிசோதனை அறிக்கை ஒரு வாரத்தில் வந்து விடும். அதன்பின்தான் வழக்கு பதிவு செய்ய முடியும். இருப்பினும் இந்த பகுதிக்கு நேற்று முன்தினம் யார்–யார் வந்தார்கள் என்ற அடிப்படையில் விசாரணையை நடத்தி வருகிறோம்.
மயில் தேசிய பறவை. பாதுகாக்கப்பட வேண்டிய பட்டியலில் முதல் இடத்தில் உள்ளதால் அவற்றை சாகடித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மதுரையில் இவ்வளவு மயில்கள் ஒரே நேரத்தில் இறந்து கிடப்பது இதுவே முதல் முறையாகும். மதுரையில் மயில்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தபடி தான் உள்ளது. இது போன்ற சோக சம்பவம் இனி மேல் நடைபெறாமல் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் வனத்துறையால் மேற்கொள்ளப்படும்.
பொதுவாக ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு பிரசாரம் வனத்துறையால் மேற்கொள்ளப்படும். அதாவது விவசாயம் நடைபெறும் காலக்கட்டத்தில் குறிப்பாக நெற்கதிர்களை நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்க பூச்சி மருந்து தெளிப்பார்கள். இந்த மருந்தினை உட்கொள்ளும் சிறிய வகை பூச்சி இனங்கள் இறந்து போகும். இந்த பூச்சிகளை மயில்கள் உண்ணும் போது அதற்கும் பாதிப்பு ஏற்படும். எனவே பூச்சி மருந்து தெளிக்கும் நாட்களில் வயல்வெளிகளில் பாதுகாவலர் ஒருவரை நியமித்து அதனை மயில்கள் போன்ற பறவைகள் தின்னாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விழிப்புணர்வு செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மயில்கள் இறந்த சம்பவம் அந்த பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இது குறித்து சிலர் கூறுகையில், “எங்கள் பகுதியில் நூற்றுக்கணக்காக மயில்களை பார்க்கலாம். ஆனால் இது வெளியில் இருப்பவர்களுக்கு அதிகம் தெரியாது. இந்த மயில்கள் கூட்டம், கூட்டமாக தோகை விரித்தாடும் காட்சியை காண கண்கோடி வேண்டும். இந்த மயில்கள் மனிதர்கள் உள்பட யாரையும் துன்புறுத்தாது. நெல் உள்பட தானியங்களையும், சிறு பூச்சிகளையும் மட்டுமே தின்று உயிர் வாழ்கிறது. அறுவடை நடைபெறும் காலத்தில் வயலில் இறங்கி நெற்கதிர்களை தின்னும். இதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் சேதம் மிக சொற்ப அளவில் தான் இருக்கும். இன்னும் 3 மாதத்தில் இந்த பகுதியில் நெற்கதிர்கள் விளைந்து விடும். எனவே நெற்பயிருக்கு மயில்கள் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற எண்ணத்தில் தான் சிலர் இந்த தீய செயலில் ஈடுபட்டு இருக்கலாம்.“ என்றனர்.