புதையலுக்காக விவசாய நிலத்தில் குழி தோண்டிய மர்ம நபர்கள்? போலீசார் விசாரணை


புதையலுக்காக விவசாய நிலத்தில் குழி தோண்டிய மர்ம நபர்கள்? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 5 Aug 2018 4:30 AM IST (Updated: 5 Aug 2018 1:34 AM IST)
t-max-icont-min-icon

சூளகிரி அருகே புதையலுக்காக விவசாய நிலத்தில் மர்ம நபர்கள் குழி தோண்டினார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள கட்டிகானபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்(வயது 43). விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலம் அந்த பகுதியில் உள்ளது. இந்த நிலையில், நேற்று மாலை வெங்கடேசனின் நிலத்தின் அருகில் சிலர் ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்தனர். அப்போது விவசாய நிலத்தில் குழி தோண்டப்பட்டிருந்தது.

இது குறித்து அவர்கள், வெங்கடேசனுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர் தனது நிலத்திற்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு 4 அடி ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டு இருந்தது. அதன் அருகில் சில பூஜை பொருட்கள் சிதறி கிடந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வெங்கடேசன் இது குறித்து சூளகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். சூளகிரி பகுதியில் பல்வேறு இடங்களில் புதையல் இருப்பதாக அவ்வப்போது மர்ம நபர்கள் கிராமங்களுக்குள் நள்ளிரவில் சென்று குழி தோண்டி, பூஜை செய்வதும், சில சமயங்களில், பொதுமக்களிடம் பிடிபடுவதும் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில், வெங்கடேசனின் நிலத்திலும் புதையல் இருக்கலாம் என்று நினைத்து மர்ம நபர்கள் குழி தோண்டி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

விவசாய நிலத்தில் குழி தோண்டிய மர்ம நபர்கள் யார்? புதையலுக்காக குழி தோண்டினார்களா? அல்லது வேறு காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story