மாவட்ட செய்திகள்

பவானி அருகே சாய தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஞ்சநேயரிடம் மீண்டும் மனுகொடுத்த பொதுமக்கள் + "||" + Resistance to the dye factory Public Sentence

பவானி அருகே சாய தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஞ்சநேயரிடம் மீண்டும் மனுகொடுத்த பொதுமக்கள்

பவானி அருகே சாய தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஞ்சநேயரிடம் மீண்டும் மனுகொடுத்த பொதுமக்கள்
பவானி அருகே சாய தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நடைபயணமாக சென்று மீண்டும் ஆஞ்சநேயரிடம் மனு கொடுத்தனர்.

பவானி,

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள வடக்கு தயிர்பாளையத்தில் 4 ஏக்கர் பரப்பளவில் சாய தொழிற்சாலை கட்டப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலை அமைக்கப்பட்டால், நீர், நிலம், காற்று மாசு அடைய வாய்ப்பு உள்ளது. இதனால் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம்’ என்ற அமைப்பை உருவாக்கி உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று காலை பவானி அருகே எலவமலையில் உள்ள பவானி ஆற்றங்கரைக்கு பொதுமக்கள் சென்றனர். பின்னர் ஆற்றங்கரையில் தீர்த்தக்குடங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து தீர்த்தக்குடங்களுடன் பொதுமக்கள் அங்கிருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் தயிர்பாளையத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு நடைபயணமாக சென்றனர். பின்னர் சாமிக்கு தீர்த்த அபிஷேகம் செய்யப்பட்டது.

இதையொட்டி தயிர்பாளையம் பகுதியில் சாய தொழிற்சாலை அமைக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி ஆஞ்சநேயரிடம் கொடுப்பதுபோல், சாமி முன்பு கோரிக்கை மனு வைத்து பொதுமக்கள் வழிபட்டனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘வடக்கு தயிர்பாளையம் பகுதியில் சாய தொழிற்சாலை அமைக்கப்பட்டால், விவசாய நிலங்கள் பாதிப்படையும். மேலும், விருமாண்டம்பாளையம், அய்யம்பாளையம், ராமகவுண்டன்வலசு, ஆலமரத்து வலசு, காமராஜர் நகர், வளையக்காரபாளையம் மற்றும் தயிர்பாளையம் ஆகிய பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசு அடைவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்படும். தொழிற்சாலை அமைக்கப்பட உள்ள பகுதி அருகே தான் காட்டு ஓடை செல்கிறது. இந்த ஓடை வழியாக வரும் தண்ணீரை கொண்டுதான் ஏராளமான விவசாயிகள் விவசாய நிலங்களில் பயிர் சாகுபடி செய்து வருகிறார்கள். ஓடையில் தொழிற்சாலை அமைக்கப்பட்டு பின்பு சாயக்கழிவுநீர் திறந்துவிடப்பட்டால் விவசாய நிலங்களும் பாதிப்பு அடையும்.

விவசாய நிலங்கள், காற்று, நீர் மாசுபடக்கூடாது என்ற காரணத்திற்காக நாங்கள் சாயத்தொழிற்சாலையை அமைக்கக்கூடாது என மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் தற்போது ‘கடவுள் காப்பாற்றுவார்’ என்ற நம்பிக்கையில், தயிர்பாளையத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் எங்களது கோரிக்கை மனுவை வைத்து வழிபட்டோம்’ என்றனர்.

ஏற்கனவே இந்த பகுதி மக்கள் கடந்த வாரம் சாய தொழிற்சாலை அங்கு அமைக்க கூடாது என்று ஆஞ்சநேயரிடம் மனுகொடுத்துள்ளனர். நேற்று பொதுமக்கள் மீண்டும் ஆஞ்சநேயரிடம் மனு கொடுத்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பவானி அருகே உள்ள வடக்கு தயிர்பாளையத்தில் சாய தொழிற்சாலை அமைக்கப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று எலவமலையில் இருந்து தயிர்பாளையத்துக்கு தீர்த்தக்குடங்களுடன் அப்பகுதி பொதுமக்கள் நடைபயணமாக சென்றனர். இந்த நடைபயணத்துக்கு அனுமதி பெறவில்லை. இதைத்தொடர்ந்து அனுமதியின்றி நடைபயணமாக சென்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க தலைவர் தியாகராஜன் மற்றும் நடைபயண ஒருங்கிணைப்பாளர் வி.பி.குணசேகரன் உள்பட 25 பேர் மீது சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.