மாவட்ட செய்திகள்

வேன் மீது ரெயில் மோதி விபத்து: தப்பி ஓடியவர்கள் யார்? ரெயில்வே போலீசார் விசாரணை + "||" + Who killed the van? Railway police investigate

வேன் மீது ரெயில் மோதி விபத்து: தப்பி ஓடியவர்கள் யார்? ரெயில்வே போலீசார் விசாரணை

வேன் மீது ரெயில் மோதி விபத்து: தப்பி ஓடியவர்கள் யார்? ரெயில்வே போலீசார் விசாரணை
மேச்சேரி அருகே வேன் மீது ரெயில் மோதிய சம்பவத்தில் தப்பி ஓடியவர்கள் யார்? என்று ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்,

ஓமலூர்-மேட்டூர் இடையே ரெயில் தண்டவாளம் உள்ளது. தற்போது அந்த பகுதியில் புதிதாக மற்றொரு ரெயில் தண்டவாளம் அமைக்க மேச்சேரி அருகே புட்டப்பட்டி பகுதியில் மணல் திட்டுகள் குவித்து வைக்கப்பட்டு உள்ளது. இந்த மணல் திட்டுக்கள் வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மணல் திட்டு மீது சென்ற வேன் திடீரென நிலைதடுமாறி 20 அடி பள்ளத்தில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் விழுந்தது. உடனே வேனில் இருந்தவர்கள் வேனை அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அப்போது மேட்டூரில் இருந்து சேலம் நோக்கி வந்த பயணிகள் ரெயில், தண்டவாளத்தில் கிடந்த வேன் மீது மோதியது. இதனால் அந்த வேன் பயங்கரமாக சேதமானது. ரெயில் என்ஜின் முன்பகுதியும் சேதமானது.

இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர், தண்டவாளத்தை ஒழுங்குப்படுத்திய பிறகு பயணிகள் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. விபத்தில் சிக்கிய அந்த வேன் துறையூரை சேர்ந்தது என்பது தெரியவந்தது. ஆனால் வேனில் வந்தவர்கள் யார்? என்று தெரியவில்லை.

இந்தநிலையில், வேனில் இருந்து தப்பி ஓடியவர்கள் 4 பேர் என்று ரெயில்வே போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்பது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.