கோவில் விழாவில் சத்துணவு பெண் பொறுப்பாளரிடம் ரூ.3 ஆயிரம் திருட்டு


கோவில் விழாவில் சத்துணவு பெண் பொறுப்பாளரிடம் ரூ.3 ஆயிரம் திருட்டு
x
தினத்தந்தி 5 Aug 2018 10:16 PM GMT (Updated: 5 Aug 2018 10:16 PM GMT)

விருத்தகிரீஸ்வரர் கோவில் விழாவில் சத்துணவு பெண் பொறுப்பாளரிடம் ரூ.3 ஆயிரம் திருட்டு போனது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருத்தாசலம், 


விருத்தாசலம் வி.என்.ஆர்.நகரை சேர்ந்தவர் நல்லதம்பி. இவருடைய மனைவி மலர்க்கொடி(வயது 45). இவர்ஆலடி அருகே உள்ள கண்ணியங்குப்பம் அரசு பள்ளியில் சத்துணவு பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டிற்கு தேவையான சமையல் பொருட்களை வாங்க விருத்தாசலத்தில் உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம். மையத்தில் ரூ.3 ஆயிரம் எடுத்துள்ளார். இதையடுத்து ரூ.3 ஆயிரம், ஏ.டி.எம். கார்டு, ஆதார் அட்டை ஆகியவற்றை ஒரு பர்சில் வைத்துக்கொண்டு, அதனை கைப்பையில் வைத்தார்.

இதனை தொடர்ந்து மலர்க்கொடி, விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நடந்த ஆடிப்பூர விழா கொடியேற்ற நிகழ்ச்சியை காண சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தபோது கூட்டநெரிசலை பயன்படுத்தி மலர்க்கொடி வைத்திருந்த கைப்பையை மர்மநபர் யாரோ திருடிவிட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மலர்க்கொடி உடனடியாக விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து கோவிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில், மலர்க்கொடியிடம் ரூ.3 ஆயிரம் வைத்திருந்த கைப்பையை திருடிய நபரின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story