முல்லைப்பெரியாறு தண்ணீரை வைகையுடன் இணைக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
கண்டமனூர் பகுதியில் முல்லைப்பெரியாறு தண்ணீரை வைகை ஆற்றுடன் இணைக்கவேண்டும் என்று துணை முதல்-அமைச்சரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
கண்டமனூர்,
கண்டமனூர் அருகேயுள்ள அம்பாசமுத்திரத்தில் பொதுமக்களிடம், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறைகேட்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. அதில், பொதுமக்களிடம் இருந்து துணை முதல்-அமைச்சர் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
அப்போது துணை முதல்-அமைச்சரை விவசாயிகள் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். அதில் கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை பெய்யவில்லை. இதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகளின் நலன் கருதி கண்டமனூர் பகுதியில் முல்லைப்பெரியாறு தண்ணீரை, வைகை ஆற்றுடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும். அம்பாசமுத்திரம் பகுதியில் தெருவிளக்குகள் எரியவில்லை. அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கண்டமனூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இரவு நேரங்களில் அனுமதியின்றி மணல் அள்ளுவதை தடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்திருந்தனர்.
மனுக்களை பெற்றுக்கொண்ட துணை முதல்-அமைச்சர் கூறுகையில், மக்களின் கோரிக்கைகள் கலெக்டர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுடன் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். முல்லைப்பெரியாறு மற்றும் வைகை ஆறு இணைப்புத் திட்டம் ஏற்கனவே வரைவு அறிக்கை பெறப்பட்டுள்ளது. அதன் பேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் ஜக்கையன் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story