கேத்தி பேரூராட்சிக்குட்பட்ட பாரதி நகரில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும், கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு
கேத்தி பேரூராட்சிக்குட்பட்ட பாரதி நகரில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு அளித்தனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை மனுக்களாக எழுதி கொடுத்தனர். அதன்படி, ஊட்டி அருகே கேத்தி பேரூராட்சிக்குட்பட்ட பாரதி நகரில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–
கேத்தி பேரூராட்சிக்குட்பட்ட பாரதி நகரில் ஏராளமானோர் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு நடைபாதை வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் கீழே இருந்து மேலே ஏறுவதற்கும், இறங்குவதற்கும் சிரமம் அடைந்து வருகிறோம். கைக்குழந்தையுடன் பெண்கள் நடக்கும் போது தவறி கீழே விழும் அபாயம் உள்ளது. மேலும் அத்தியாவசிய தேவையான குடிநீர் எடுப்பதற்கு முக்கிய சாலையை கடந்து சென்று தான் எடுக்க வேண்டிய சூழ்நிலை காணப்படுகிறது.
இரவு நேரங்களில் வேலைக்கு சென்று வீடுகளுக்கு திரும்பி வருகிறவர்கள் தெருவிளக்குகள் இல்லாததால் தட்டு தடுமாறி வருகின்றனர். பாரதி நகரில் கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடனேயே வேலைக்கு சென்று வருகிறார்கள். எனவே, நடைபாதை, குடிநீர் வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 192 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பரிசீலனை செய்து தகுதி இருப்பின் உரிய நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து ஊட்டி தாலுகாவுக்குட்பட்ட அணிக்கொரை கிராமத்தை சேர்ந்த சித்ராவுக்கு குடும்ப வறுமை காரணமாக மாவட்ட கலெக்டரின் விருப்புரிமை நிதியில் இருந்து ரூ.20 ஆயிரத்துக்கான காசோலை, ஊட்டி கிரீன்பீல்டு பகுதியை சேர்ந்த நவீன்குமாருக்கு தொழில் தொடங்க ரூ.20 ஆயிரத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது. இதில் தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) முருகன், உதவி ஆணையர் (கலால்) ஜெய்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.