மாவட்ட செய்திகள்

மாட்டு வண்டி தொழிலாளர்கள் சாலை மறியல் + "||" + Cow cart workers stir the road

மாட்டு வண்டி தொழிலாளர்கள் சாலை மறியல்

மாட்டு வண்டி தொழிலாளர்கள் சாலை மறியல்
விருத்தாசலம் அருகே மணல் குவாரியில் ‘ஸ்வைப் மெஷின்’ மூலம் பணம் வசூலிக்கும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாட்டுவண்டி தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலம், 


விருத்தாசலம் மணவாளநல்லூர் மணிமுக்தாற்றில் அரசு மாட்டுவண்டி மணல் குவாரி இயங்கி வருகிறது. கடலூர், விழுப்புரம், சேலம் மாவட்டங்களை சேர்ந்த மாட்டு வண்டி தொழிலாளர்கள் இந்த மணல் குவாரிக்கு வந்து மணல் அள்ளி செல்கின்றனர். அவ்வாறு மணல் அள்ள வருபவர்களிடம் ஒரு மாட்டு வண்டிக்கு ரூ.100 வீதம் வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் குவாரியில் இருந்து மணல் அள்ளிக்கொண்டு புறப்பட்டன. பின்னர் தொழிலாளர்கள் அங்கிருந்த பொதுப்பணித்துறையை சேர்ந்த ஊழியரிடம் 100 ரூபாய் கொடுத்து ரசீது கேட்டனர்.

அப்போது ஊழியர் தொழிலாளர்கள் கொடுத்த பணத்தை வாங்க மறுத்ததுடன், ‘ஸ்வைப் மெஷின்’ மூலம் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி தான் பணம் செலுத்த வேண்டும் எனக்கூறி ஏ.டி.எம். கார்டு கேட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் இந்த முறைக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், தற்போது நாங்கள் ஏ.டி.எம். கார்டு கொண்டுவரவில்லை எனக்கூறினர்.

இருப்பினும் அவர் தொழிலாளர்களிடம் பணம் வாங்க மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் மாட்டு வண்டியை மணலுடன் நடு ஆற்றில் விட்டுவிட்டு அந்த பகுதியில் உள்ள விருத்தாசலம்-சேலம் தேசிய நெடுஞ்சாலைக்கு வந்தனர். தொடர்ந்து அங்க சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தை நடத்த வராததால், தொழிலாளர்கள் மறியலை கைவிட்டு சாலையோரம் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த விருத்தாசலம் போலீசார் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த நிலையில் அங்கு வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம், ‘ஸ்வைப் மெஷின்’ மூலம் ஏ.டி.எம். கார்டை கொண்டு பணம் செலுத்துவதற்கு ஒரு வார கால அவகாசம் வேண்டும் என்று தொழிலாளர்கள் கூறினர்.

அதனை ஏற்ற பொதுப்பணித்துறையினர் மாட்டு வண்டி தொழிலாளர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு ரசீது வழங்கினர். இதையடுத்து தொழிலாளர்கள் தங்கள் மாட்டு வண்டிகளை ஓட்டிச்சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.