ராயக்கோட்டை-கிருஷ்ணகிரி வழியாக சென்னைக்கு ரெயில் பாதை அமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை


ராயக்கோட்டை-கிருஷ்ணகிரி வழியாக சென்னைக்கு ரெயில் பாதை அமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 7 Aug 2018 4:00 AM IST (Updated: 7 Aug 2018 1:24 AM IST)
t-max-icont-min-icon

ராயக்கோட்டை- கிருஷ்ணகிரி வழியாக சென்னைக்கு ரெயில் பாதை அமைக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கதிரவன் தலைமையில் நடந்தது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு முதியோர் உதவித்தொகை, சாலை வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் கொடுத்தனர். ராயக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

ராயக்கோட்டையில் விவசாய வர்த்தகம் மிகப்பெரிய அளவில் நடக்கிறது. தென்னிந்தியாவில் உள்ள மிகப்பெரிய தக்காளி மார்க்கெட்டுகளில் ராயக்கோட்டையும் ஒன்று. இங்கு தக்காளி, காய்கறிகள், சாமந்தி பூ, என 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வெளிமாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு கனரக வாகனங்கள் மூலம் தினமும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ராயக்கோட்டையில் இருந்து சென்னைக்கு ரெயில் மூலம் ஏற்றுமதி செய்தால் அதிக நேரம், அதிக தூரம் ஆவதால் யாரும் ஏற்றுமதி செய்வதில்லை. இங்கு தினசரி குறைந்த பட்சம் 100 டன் காய்கறிகளும், சீசனில் 100 டன் சாமந்திப் பூக்களும் சென்னைக்கு லாரிகள் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் இவற்றை ஏற்றுமதி செய்ய சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே ராயகோட்டை-கிருஷ்ணகிரி வழியாக சென்னைக்கு ரெயில் பாதை போக்குவரத்தை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

போச்சம்பள்ளி தாலுகா அகரத்தை அடுத்துள்ள பட்டகரஅள்ளி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், அகரம் ஊராட்சி பட்டகரஅள்ளி கிராமத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரில் இருந்து ஏரிகோடி வரை உள்ள மண் சாலையை கிராம மக்கள் தங்கள் நிலங்களுக்கு செல்லவும், விளை பொருட்களை வண்டி, வாகனங்களில் எடுத்து வரவும், கால்நடைகளை அழைத்து சென்று வரவும், நிலத்தில் வீடு கட்டி வசித்து வருபவர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்லவும், இறந்தவர்களின் உடல்களை இடுகாட்டிற்கு எடுத்து செல்லவும் இந்த மண் சாலையை காலம் காலமாக பயன்படுத்தி வருகின்றனர்.

அத்துடன் இந்த மண் சாலையில் இருபுறமும் கால்வாய் இருந்தது. இதன் வழியாக தான் ஏரிக்கு தண்ணீர் சென்று கொண்டிருந்தது.

இந்த நிலையில் மண் சாலையின் இருபுறமும் நிலம் வாங்கி உள்ள ஒருவர், நிலத்தின் அருகில் உள்ள அரசு புறம்போக்கு, ஏரிகோடி புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து சாலையையும், கால்வாயையும் ஆக்கிரமித்துள்ளார். இது குறித்து அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவே இந்த பிரச்சினையில் நிரந்தர தீர்வு கண்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story