திருப்பத்தூர், காரைக்குடி பகுதிகளில் அதிவேகத்தில் செல்லும் பஸ்களால் தொடரும் விபத்துகள்
திருப்பத்தூர், காரைக்குடி பகுதிகளில் அதிவேகத்தில் செல்லும் பஸ்களால் விபத்துகள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. அவ்வாறு அசுர வேகத்தில் செல்லும் பஸ்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
காரைக்குடி,
சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி நகரம் வேகமாக வளர்ந்து வரும் நகரமாகும். இதற்கு ஏற்றாற்போல் இங்கு அழகப்பா பல்கலைக்கழகம், அரசு மற்றும் பெண்கள் கலைக்கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, தனியார் மற்றும் அரசு பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது. இதையடுத்து இந்த கல்வி நிறுவனங்களுக்கு தினசரி ஆயிரக்கணக்கான மாணவ–மாணவிகள் வெளியூர்களில் இருந்து பஸ் மற்றும் ரெயில் மூலம் வந்து செல்கின்றனர். இதேபோல் தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதி மக்கள் தங்களது மருத்துவம், வியாபாரம் உள்ளிட்ட தேவைக்கு மதுரைக்கு சென்று வருகின்றனர். மதுரைக்கு வேண்டுமானால் பெரும்பாலும் பஸ்களில் தான் செல்ல வேண்டும். காரைக்குடி–மதுரை இடையே 80 கி.மீ. தூரத்திற்கு ரெயில்வே வழித்தடம் அமைத்து, இப்பகுதி மக்களின் தேவைக்காக ரெயில் விட வேண்டும் என்று பல ஆண்டுகள் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தேவகோட்டையில் இருந்து மதுரைக்கு அரசு பஸ்களில் சென்றால் கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஆகிறது. மேலும் காரைக்குடியில் இருந்து 2½ மணி நேரமும், திருப்பத்தூரில் இருந்து 2 மணி நேரமும் ஆகிறது. இதனால் விரைந்து செல்ல வேண்டும் என்பதற்காக பயணிகள் பெரும்பாலானோர் தனியார் பஸ்களை நாடுகின்றனர். அரசு பஸ்களில் டிக்கெட் கட்டணம் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டதும் முக்கிய காரணம். அதற்கு ஏற்றவாறு தனியார் பஸ்களும் தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து புறப்பட்டு மதுரைக்கு அரசு பஸ்களை விட ½ மணி நேரம் முன்னதாக கொண்டுப்போய் சேர்த்துவிடுகின்றன. இதனால் அரசு பஸ்களில் பயணத்தை தவிர்த்து, பயணிகள் தனியார் பஸ்களில் தான் அதிக அளவில் பயணம் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் தனியார் பஸ் டிரைவர்கள் தங்களது வசூலை மட்டுமே குறிக்கோளாக கொண்டு அதிவேகமாக செல்கின்றனர். இவ்வாறு அதிவேகத்தில் செல்லும் பஸ்களால் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து, உயிர்பலி ஏற்பட்டு வருகிறது. கடந்த ஜூன் மாதம் சிவகங்கையில் இருந்து திருப்பத்தூர் வழியாக காரைக்குடியை நோக்கி அதிவேகத்தில் சென்ற தனியார் பஸ் ஒன்று பாதரக்குடி சாலையோரம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்துபோனார்கள். 30–க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதேபோல் கடந்த மாதம் 18–ந்தேதி மதுரையில் இருந்து காரைக்குடி சென்ற தனியார் பஸ் திருப்பத்தூரை அடுத்த எஸ்.எஸ்.கோட்டை பகுதியில் வந்தபோது தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த 40 பயணிகள் காயமுற்றனர். இதேபோன்று அதிவேகத்தில் செல்லும் பஸ்களால் விபத்துகள் அரங்கேறி வருகின்றன.
எனவே விபத்திற்கு வழிவகுக்கும் வகையில் அதிவேகமாக செல்லும் பஸ்கள் மீது மோட்டார் போக்குவரத்து அதிகாரிகள் கடும் நடவடிக்கையாக உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.