வத்திராயிருப்பு அருகே தீண்டாமை சுவரை அகற்றக் கோரி கலெக்டரிடம் மனு
வத்திராயிருப்பு அருகே உள்ள வ.புதுப்பட்டியில் கட்டப்பட்டுள்ள தீண்டாமை சுவரை அகற்ற வேண்டும் என கோரி அங்கு வசிக்கும் மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஏராளமானோர் மனு கொடுத்தனர். வத்திராயிருப்பு அருகேயுள்ள வ.புதுப்பட்டி திரு.வி.க. தெருவில் வசிக்கும் ஆதிதிராவிடர் சமுதாய மக்கள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
வ.புதுப்பட்டி திரு.வி.க. தெருவில் ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்த 150 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். காலம் காலமாக நாங்கள் வசித்து வந்த இந்த தெருவில் கடந்த 2010–ம் ஆண்டு மற்றொரு சமுதாய மக்கள் சட்டத்திற்கு புறம்பாக தெருவை மறித்து தீண்டாமை சுவரை கட்டி உள்ளனர். அதனை அகற்றுவதற்கு நாங்கள் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தங்களிடம் மனு கொடுத்த போது தாங்கள் உத்தரவிட்டதன் பேரில் கடந்த மே மாதம் 29–ந்தேதி அன்று வ.புதுப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் சர்வே செய்ததில் மேற்படி தீண்டாமை சுவர் தெருவை மறித்து கட்டப்பட்டது உறுதி செய்யப்பட்டது. ஆனாலும் தாசில்தார் அச்சுவரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகிறார். எனவே தீண்டாமை சுவரை அகற்ற சட்டப்படி உரிய நடவடிக்கை எடுத்து நாங்கள் மீண்டும் அத்தெருவை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விவசாய சங்கத்தின் விருதுநகர் தாலுகா செயலாளர் பால்சாமி மற்றும் விவசாயிகள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
விருதுநகர் தாலுகா ஏ.புதுப்பட்டி வருவாய் கிராமத்தில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய மக்காச்சோள பயிருக்கான இழப்பீட்டு தொகை ஒரு ஏக்கருக்கு ரூ.14 ஆயிரத்துக்கு பதிலாக ரூ.4 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுகிறது. மாவட்டத்தின் பல பகுதிகளில் மக்காச்சோள பயிருக்கு இழப்பீட்டுத்தொகையாக ரூ.17 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. ஏ.புதுப்பட்டி கிராமத்தின் அருகில் உள்ள வீரார்பட்டி கிராமத்திலும் விவசாயிகளுக்கு ரூ.17 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
ஒரே வருவாய் கிராமத்தில் இழப்பீட்டு தொகை வழங்கப்படுவதில் பாரபட்சம் காட்டப்படுவதால் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளோம். விவசாயத்துக்காக வாங்கிய கடனை எப்படி அடைப்பது என்பது தெரியாமல் தவித்து வருகிறோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே இப்பிரச்சினையில் தாங்கள் தலையிட்டு பாரபட்சம் இல்லாமல் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.17 ஆயிரம் இழப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
சிவகாசி தாலுகா வாடியூர் கிராமத்தில் கோவிந்தநல்லூர் முதல் கன்னிசேரி வரையிலான பொதுப்பாதையில் தனியார் பட்டாசு ஆலை நிறுவனத்தினர் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியுள்ளனர் என்றும், இந்த ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கோவிந்தநல்லூரை சேர்ந்த சமூக ஆர்வலர் சக்திவேல் என்பவர் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார்.