மாவட்ட செய்திகள்

கேரளாவில் புதிய மண்டலம் அமைக்க தெற்கு ரெயில்வே பகுதிகளை பிரிக்க அனுமதிக்க கூடாது, மத்திய அரசிடம் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்த கோரிக்கை + "||" + Set up a new zone in Kerala Do not allow the Southern Railway to be separated

கேரளாவில் புதிய மண்டலம் அமைக்க தெற்கு ரெயில்வே பகுதிகளை பிரிக்க அனுமதிக்க கூடாது, மத்திய அரசிடம் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்த கோரிக்கை

கேரளாவில் புதிய மண்டலம் அமைக்க தெற்கு ரெயில்வே பகுதிகளை பிரிக்க அனுமதிக்க கூடாது, மத்திய அரசிடம் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்த கோரிக்கை
கேரள மாநிலத்தில் புதிய ரெயில்வே மண்டலம் அமைக்க தெற்கு ரெயில்வே பகுதிகளை பிரிக்க கூடாது என மத்திய ரெயில்வே அமைச்சகத்திடம் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

விருதுநகர்,

தெற்கு ரெயில்வே மண்டலம் தேசிய அளவில் முதலில் உருவாக்கப்பட்ட மண்டலமாகும். கடந்த 1951–ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தன்று தொடங்கப்பட்ட இந்த ரெயில்வே மண்டலத்தில் 9,654 கி.மீ. தூர ரெயில் பாதை இருந்தது. இதன் பின்னர் கடந்த 1966–ம் ஆண்டு தெற்கு ரெயில்வே மண்டலத்திலிருந்து செகந்திராபாத்தை தலைமையிடமாக கொண்ட தென் மத்திய ரெயில்வே மண்டலமும் இதனை தொடர்ந்து ஹூப்ளியை தலைமையிடமாக கொண்டு தென் மேற்கு ரெயில்வே மண்டலமும் உருவானது.

இவ்வாறு தெற்கு ரெயில்வேயிலிருந்து ரெயில் பாதைகள் பிரிக்கப்பட்டு புதிய மண்டலங்கள் உருவாக்கப்பட்ட போது தமிழகத்தில் இருந்து அரசு தரப்பில் இருந்தோ பொதுமக்கள் தரப்பில் இருந்தோ எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் பாலக்காடு கோட்டத்திலிருந்து சில பகுதிகளை பிரித்து கடந்த 2006–ம் ஆண்டு சேலம் ரெயில்வே கோட்டம் உருவாக்கப்பட்ட போது கேரளாவில் இருந்து கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. அப்போது அந்த எதிர்ப்பை சமாளிக்க தமிழகத்திலுள்ள போத்தனூர் மற்றும் பொள்ளாச்சி பகுதிகள் பாலக்காடு கோட்டத்திற்கு தாரை வார்க்கப்பட்டன.

தற்போது தெற்கு ரெயில்வே மண்டலத்தில் இருந்து ரெயில் வழித்தடங்களை பிரித்து கேரள மாநிலத்திற்கென தனியாக ரெயில்வே மண்டலம் அமைக்க வேண்டும் என்று கேரள மாநில எம்.பி.க்களும் அந்த மாநில அரசும் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. ஒரு ரெயில்வே மண்டலம் அமைக்க வேண்டும் என்றால் அந்த மண்டலத்தில் குறைந்த பட்சம் 3 ரெயில்வே கோட்டங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். தற்போது கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு என 2 ரெயில்வே கோட்டங்களே உள்ளன.

எனவே 3–வது ரெயில்வே கோட்டத்தை அமைக்க தெற்கு ரெயில்வேயில் தமிழகப்பகுதிகளில் உள்ள வழித்தடங்களை பிரித்து புதிய கோட்டம் உருவாக்கி கேரளாவில் தனி மண்டலம் அமைக்க வேண்டும் என கேரள எம்.பி. க்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஏற்கனவே முன்னோடி ரெயில்வே மண்டலமான தெற்கு ரெயில்வே மண்டலம் பலமுறை பிரிக்கப்பட்டுள்ளதால் நிர்வாகத்திலுள்ள வழித்தடங்களின் தூரம் குறைந்து விட்டதோடு வருமானமும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரெயில்வேக்கு வருமானம் பாதிக்கப்படும் போது இந்த மண்டலத்திற்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியும் வெகுவாக குறைக்கப்பட்டுவிடும். இதனால் தெற்கு ரெயில்வே மண்டலத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழகத்தில் ரெயில்வே வளர்ச்சி திட்டங்களை அமல் படுத்துவதிலும் பாதிப்பு ஏற்படும். இதனால் தமிழக மக்களுக்கு கூடுதல் ரெயில் வசதி கிடைப்பதிலும் பிரச்சினை ஏற்படும்.

தொடக்கத்தில் கிட்டத்தட்ட 10 ஆயிரம் கி.மீ. தூர ரெயில் பாதையுடன் இருந்த தெற்கு ரெயில்வே மண்டலம் தென் மத்திய ரெயில்வே மண்டலம் மற்றும் தென்மேற்கு மண்டலங்களை பிரிக்கும் போது 2500 கி.மீ. தூர ரெயில் பாதையை இழந்து விட்டது. தற்போது கேரள மாநிலத்தில் புதிய ரெயில்வே மண்டலத்தை உருவாக்க மேலும் ஆயிரம் கி.மீ. தூர ரெயில்பாதையை தெற்கு ரெயில்வே மண்டலத்திலிருந்து பிரிக்க வலியுறுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

எனவே தமிழக எம்.பி.க்கள் தமிழகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு கேரளாவில் புதிய ரெயில்வே மண்டலம் அமைப்பதற்காக தெற்கு ரெயில்வே பகுதிகளை பிரிப்பதற்கு அனுமதிக்க கூடாது என மத்திய ரெயில்வே அமைச்சகத்திடம் வலியுறுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

மேலும் திருவனந்தபுரம் கோட்டத்திலுள்ள தமிழக ரெயில்பாதை பகுதிகளை மதுரை கோட்டத்துடன் இணைக்கவும் செங்கோட்டை–புனலூர்–கொல்லம் ரெயில்பாதை தொடர்ந்து மதுரை கோட்ட நிர்வாகத்தில் இருக்கவும் தமிழக எம்.பி.க்கள் ரெயில்வே அமைச்சகத்திடம் வலியுறுத்த வேண்டியது அவசியமாகும். கேரள மாநிலத்திற்கென தனி ரெயில்வே மண்டலம் அமைப்பதற்கு ஆட்சேபனை ஏதும் இல்லாத நிலையில் தெற்கு ரெயில்வே பகுதிகளை பிரிக்கக்கூடாது என மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டியது அவசியமாகும்.