பாசனத்துக்காக வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும் கலெக்டரிடம் விவசாயிகள் மனு


பாசனத்துக்காக வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும் கலெக்டரிடம் விவசாயிகள் மனு
x
தினத்தந்தி 7 Aug 2018 4:15 AM IST (Updated: 7 Aug 2018 1:48 AM IST)
t-max-icont-min-icon

பாசனத்துக்காக வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.

திருச்சி,

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ராஜாமணி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

திருச்சி மாவட்டம் முசிறி கோட்டூர், ஏவூர், ஆமூர், கல்லூர், குணசீலம், மணப்பாளையம், கொடுந்துரை, கரளாவழி, கருப்பம்பட்டி உள்பட 13 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், “காவிரி ஆற்றில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து 15 நாட்கள் முடிந்தும், இதுவரை எங்கள் பகுதியில் உள்ள சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு முசிறி வடகரை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடவில்லை. கடந்த 3 ஆண்டுகளாக இதே நிலை நீடித்து வருகிறது. முசிறி ஆற்றுபாதுகாப்பு உபகோட்டம் மந்தமாக செயல்படுகிறது. ஆகவே அதிகாரிகளை துரிதப்படுத்தி எங்கள் பகுதி விவசாயம் செழிக்க முசிறி வடகரை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி இருந்தனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் அயிலை சிவ.சூரியன் தலைமையில் விவசாயிகள் கொடுத்த மனுவில், “அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கொடியாலம் ஊராட்சி அயிலாப்பேட்டை கிராமத்தில் மார்கண்டேயன் கோவில் முதல் வாடிவாசல் வடிகால் வரை உள்ள சாக்கடை சுமார் 100 மீட்டர் தூரம் அருகில் உள்ள தார்ச்சாலையை விட தாழ்வாக உள்ளதால் அடிக்கடி குப்பைகள் தேங்கி கழிவுநீர் வடிந்து செல்ல வழியில்லாமல் உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே இந்த சாக்கடையை தூர்வாரி சாலை மட்டத்தைவிட சற்று உயரப்படுத்தி கட்டி தர வேண்டும். அயிலாப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆரம்பப்பள்ளி முன்பு உள்ள மைதானத்தில் மழைநீர் தேங்காதவாறு சீரமைத்து தர வேண்டும்” என்று கூறி இருந்தனர்.

திருச்சி சிந்தாமணி காந்திநகர் பகுதி மக்கள் கொடுத்த மனுவில், “எங்கள் பகுதியில் காந்திநகர், அந்தோணியார்கோவில்தெரு, வெனீஸ்தெரு என 3 தெருக்களை உள்ளடக்கியதாகும். இங்கு கடந்த 10 ஆண்டுகளாக எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை. சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. மழைக்காலங்களில் சாக்கடைகள் அடைத்து கொண்டு மழைநீர் சாக்கடையுடன் கலந்து தெருக்களில் ஓடுகிறது. இதனால் நோய்பரவுகிறது. எங்கள் பகுதியில் கூலித்தொழிலாளர்கள் பலர் உள்ளனர். குடிசை வீடுகளில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். குடிசை மாற்று வாரியத்தின் மூலம் எங்கள் பகுதியில் வீடு கட்டித்தர கணக்கு எடுத்து சென்றார்கள். இதுவரை எந்த தகவலும் இல்லை. ஆகவே எங்கள் பகுதியில் வீடு கட்டி தரவும், அடிப்படை வசதிகளை செய்து தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறி இருந்தனர்.

இதேபோல் திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டிடத்தின் கீழ்தளத்தில் இயங்கி வரும் லிப்ட்களில் ஒன்று பழுதடைந்து, ஒரு லிப்ட் மட்டுமே இயங்கி வருவதாகவும், இதனால் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் மேல்தளம் செல்வதற்கு காத்து கிடக்க வேண்டிய நிலை உள்ளதாகவும், மேலும், அந்த கட்டிடத்தின் கீழ்தளத்தில் உள்ள கழிவறை சுகாதாரமற்ற நிலையில் உள்ளதால், அதனை பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கக்கோரியும் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 136 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 88 ஆயிரத்து 600 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ராஜாமணி வழங்கினார். 

Next Story