முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் 50 பவுன் நகை, ரூ.4 லட்சம் கொள்ளை
வாணியம்பாடியில் முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை, ரூ.4 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வாணியம்பாடி,
வாணியம்பாடி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அப்துல்சமத். இவர், 1989-ல் தி.மு.க. கூட்டணியில் இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது குடும்பத்தினர் வாணியம்பாடி நியூடவுனில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு எம்.எல்.ஏ.வின் குடும்பத்தினர் பெங்களூருவில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றனர். பின்னர் அங்கிருந்து நேற்று காலை அப்துல்சமத் மகன் நதீம் மற்றும் குடும்பத்தினர் வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 50 பவுன் நகை மற்றும் ரூ.4 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து வாணியம்பாடி டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் வேலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து கைரேகைகளை சேகரித்து சென்றனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story