கருகிய நிலையில் தொழில்அதிபர் உடல் மீட்பு கொலை செய்யப்பட்டாரா? போலீஸ் விசாரணை


கருகிய நிலையில் தொழில்அதிபர் உடல் மீட்பு கொலை செய்யப்பட்டாரா? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 8 Aug 2018 2:53 AM IST (Updated: 8 Aug 2018 2:53 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு அருகே காணாமல் போனதாக தேடப்பட்ட தொழில் அதிபர், உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டார். அவர் எரித்து கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெங்களூரு,

பெங்களூரு புறநகர் தொட்டபள்ளாப்புரா அருகே மாருதிநகரில் வசித்து வந்தவர் ராஜசேகர் (வயது 56). தொழில்அதிபர். அவர், வீட்டில் இருந்து தனது காரில் வெளியே புறப்பட்டு சென்றார். ஆனால் நள்ளிரவு வரை ராஜசேகர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. ராஜசேகரை அவரது குடும்பத்தினர் தேடியும், விசாரித்து பார்த்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. மேலும் அவரது செல்போனும் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் காலையில் தொட்டபள்ளாப்புரா டவுன் ‘டி‘ கிராசில் உள்ள மேம்பாலத்திற்கு அடியில் உள்ள ரோட்டில் ஒருவர் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடலுக்கு அருகில் ஒரு கார் நின்றது. இதை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அவர்கள் உடனடியாக தொட்டபள்ளாப்புரா டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்கள். போலீசார் விரைந்து வந்து பிணமாக கிடந்தவரின் உடலை மீட்டு விசாரித்தனர்.

அப்போது காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த தொழில்அதிபர் ராஜசேகர் என்று உடல் அடையாளம் காணப்பட்டது. மேலும் கடன் தொல்லை காரணமாக அவர் தீக்குளித்து தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காக மர்மநபர்கள் அவரை எரித்து கொலை செய்தார்களா? என்பது தெரியவில்லை. விசாரணைக்கு பின்பு ராஜசேகரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப் பட்டது.

பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் ராஜசேகர் எப்படி இறந்தார்? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தொட்டபள்ளாப்புரா டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story