வருமான வரி கணக்குகளை உரிய காலத்தில் தாக்கல் செய்ய வேண்டும்


வருமான வரி கணக்குகளை உரிய காலத்தில் தாக்கல் செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 9 Aug 2018 12:02 AM GMT (Updated: 9 Aug 2018 12:02 AM GMT)

வருமான வரி கணக்குகளை உரிய காலத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று வியாபாரிகளுக்கு புதுச்சேரி வருமான வரித்துறை இணை ஆணையர் சிவக்குமார் கூறியுள்ளார்.

பண்ருட்டி, 


வருமான வரித்துறை சார்பில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது குறித்த விழிப்புணர்வு கூட்டம் பண்ருட்டியில் நடைபெற்றது. இதற்கு புதுச்சேரி வருமான வரித்துறை இணை ஆணையர் சிவக்குமார் தலைமை தாங்கினார். கடலூர் துணை ஆணையர் வீரமணி, வருமான வரித்துறை அலுவலர்கள் செல்வி, சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு முந்திரி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் டி.ஆர்.வி.எஸ்.ஸ்ரீரமேஷ், செயலாளர் பிரதீபா ராமகிருஷ்ணன், பொருளாளர் செல்வமணி, ஏற்றுமதியாளர்கள் விஜயகாந்த் பாரதிதாசன், பி.எஸ்.ரங்கநாதன், அனைத்து வியாபாரிகள் சங்க சம்மேளன செயலாளர் ராஜேந்திரன், மதன்சந்த் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் வருமானவரித்துறை இணை ஆணையர் சிவக்குமார் பேசுகையில், பொதுமக்கள், வியாபாரிகள், தங்களது வருமான வரி கணக்கினை உரிய காலத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இப்போது ஆன்-லைன் மூலம் உங்கள் கணக்குகளை தாக்கல் செய்து கொள்ளலாம். உரிய காலத்தில் தங்களது கணக்கினை சமர்ப்பித்தால் உங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் இழப்பினை தவிர்க்கலாம், இந்தியாவில் வருமான வரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வருகிற 30-ந்தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கு பின் தாக்கல் செய்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். டிசம்பர் மாதத்துக்கு பின் தாக்கல் செய்தால் ரூ.10 ஆயிரம் அபராதம் கட்ட வேண்டும். பொதுமக்களிடமும், வியாபாரிகளிடமும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டியது குறித்து வருமானவரித்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றார். 

Next Story