தூத்துக்குடி மாவட்டத்தில் இயல்புநிலை திரும்பியது பஸ்கள் ஓடின; கடைகள் திறக்கப்பட்டன மீனவர்கள் கடலுக்கு சென்றனர்
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பஸ்கள் வழக்கம் போல் ஓடியதுடன், கடைகள் திறக்கப்பட்டு இயல்புநிலை திரும்பியது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பஸ்கள் வழக்கம் போல் ஓடியதுடன், கடைகள் திறக்கப்பட்டு இயல்புநிலை திரும்பியது. பள்ளி, கல்லூரி, அரசு, தனியார் அலுவலகங்கள் செயல்பட்டன. மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.
கடையடைப்புதி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த 7–ந்தேதி மாலையில் மரணம் அடைந்தார். இதனால் அன்று இரவு பரபரப்பாக காணப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய இடங்களில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் மாவட்டத்தில் உள்ள சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டு இருந்தன.
அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் உள்பட அனைத்து பஸ்களும் இயங்கவில்லை. இதனால் தூத்துக்குடி பஸ் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. லாரி, ஆட்டோ, வேன், கார் உள்ளிட்டவையும் இயக்கப்படவில்லை. இதனால் தூத்துக்குடியில் உள்ள அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன.
அதே போல் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம், திருச்செந்தூர் அமலி நகர், மணப்பாடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் கடற்கரைகளில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
இயல்புநிலைஇந்த நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் இயல்புநிலை திரும்பியது. மாவட்டத்தில் உள்ள கடைகள் அனைத்தும் வழக்கம் போல் திறக்கப்பட்டன. அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் உள்பட அனைத்து பஸ்களும் இயக்கப்பட்டன. இதனால் தூத்துக்குடி பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் வழக்கம் போல் காணப்பட்டது. லாரி, ஆட்டோ, வேன், கார் உள்ளிட்டவையும் இயக்கப்பட்டன. பள்ளி, கல்லூரிகள் இயங்கின. அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்பட்டன. மாவட்டத்தில் உள்ள தியேட்டர்களில் படங்கள் திரையிடப்பட்டன.
மீனவர்கள் கடலுக்கு சென்றனதூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீனவர்கள் காலையில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். தூத்துக்குடி காய்கறி மார்க்கெட் அதிகாலையில் திறக்கப்பட்டு வழக்கம் போல் பரபரப்பாக இயங்கியது. இதனால் பொதுமக்களும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.