டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x
தினத்தந்தி 9 Aug 2018 11:00 PM GMT (Updated: 9 Aug 2018 5:30 PM GMT)

டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேட்டூர்,

கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. அந்த அணைகளில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கடந்த மாதம் சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. எனவே கடந்த மாதம் 19–ந்தேதி அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வெளியேறிக்கொண்டிருக்கிறது.

இதற்கிடையே கடந்த மாதம் 23–ந்தேதி மேட்டூர் அணை முழு கொள்ளவான 120 அடியை எட்டியது. பாசன தேவைக்காக திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவை விட அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருந்ததால் அணையில் இருந்து உபரிநீர் 16 கண் பாலம் வழியாக திறக்கப்பட்டது. 10 நாட்களுக்கு பின்னர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் உபரிநீர் போக்கி வழியாக தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது. அணையில் இருந்து பாசனத்திற்காக திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை விட அணைக்கு நீர்வரத்து குறைவாக இருந்ததால் அணை நீர்மட்டம் கடந்த 2–ந்தேதி 119.98 அடியாக குறைந்தது. தொடர்ந்து நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. நேற்று காலை அணை நீர்மட்டம் 117.51 அடியாக இருந்தது.

ஆனால் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறப்பது அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அணையில் இருந்து வினாடிக்கு 18,300 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று மதியம் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 25,800 கனஅடியாக அதிகரிக்கப்பட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறது. அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்துள்ளது. நேற்று முன்தினம் 9,898 கனஅடி தண்ணீர் வந்தது. நேற்று 8,751 கனஅடி தண்ணீர் வந்தது.

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் மீண்டும் மழை தீவிரம் அடைந்துள்ளதால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து வினாடிக்கு – கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. எனவே மேட்டூர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இதன் காரணமாகவும், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளதாலும் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் சார்பில், அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் பாலத்தையொட்டி அமைந்துள்ள தங்கமாபுரிபட்டணம், பெரியார்நகர் உள்பட காவிரி கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் தாழ்வான பகுதிகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தண்டோரா போட்டு எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள்.


Next Story