மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்


மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 9 Aug 2018 10:30 PM GMT (Updated: 9 Aug 2018 7:28 PM GMT)

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற மாணவ, மாணவிகள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

புதுக்கோட்டை,

தமிழ்நாட்டில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தை சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2018-19-ம் கல்வியாண்டில் ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி படிப்புக்கான கல்வி உதவித்தொகையும், 11-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் மற்றும் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகையும் பெறுவதற்கு மத்திய அரசின் www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகைக்கான இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாட்டில் 2018-19-ம் கல்வியாண்டில் மேற்படி கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் 1 லட்சத்து 33 ஆயிரத்து 404 புதிய விண்ணப்பங்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க மத்திய அரசால் இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த கல்வி உதவித்தொகை மாணவ, மாணவிகளின் வங்கி கணக்கில் மத்திய அரசால் நேரடியாக செலுத்தப்படும்.

கல்வி உதவித்தொகை புதியது மற்றும் புதுப்பித்தல் இனங்களுக்கு வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை மேற்படி இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மாணவ, மாணவிகள் அனைவரும் இணையதளத்தில் கேட்கப்பட்டு உள்ள அனைத்து விவரங்களையும் விடுபடாமல் பூர்த்தி செய்து விண்ணப்பத்தை படியிறக்கம் செய்து, அதனுடன் மாணவ, மாணவியுடைய புகைப்படம் மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களின் நகல்களை இணைத்து குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கல்வி நிலையத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

கல்வி நிலையங்கள் இணையதளம் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களை அவ்வப்போது உடனுக்குடன் பரிசீலித்து விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டு உள்ள விவரங்களை சான்றாவணங்களுடன் சரிபார்த்து உறுதி செய்து தகுதி பெற்ற விண்ணப்பங்களை இணையதளம் மூலம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் இணையதளத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு உள்ள கல்வி நிலையங்களின் தொலைபேசி எண்கள் அல்லது பாடப்பிரிவில் மாற்றம் இருப்பின் உடனடியாக திருத்தம் செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது. புதிதாக விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள் இணையதளத்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் அனைத்து கல்வி நிலையங்களும் தங்களுடைய DI-SE / AI-S-HE குறியீட்டு எண்ணை மாணவ, மாணவிகளுக்கு தெரிவிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார். 

Next Story