கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் சேவை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு


கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் சேவை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு
x
தினத்தந்தி 9 Aug 2018 10:15 PM GMT (Updated: 9 Aug 2018 8:05 PM GMT)

கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் சேவை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று திருவாரூர் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.

திருவாரூர்,

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை தாலுகா மாராச்சேரியை சேர்்ந்த ராஜசேகர். கூலித்தொழிலாளி. இவர், தனது குழந்தைகளின் எதிர்காலம் கருதி தமது சேமிப்பில் இருந்து பாமணி அஞ்சல் அலுவலகத்தில் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து தமது பெயரிலும் மற்றும் அவரது மனைவி பெயரிலும் காப்பீட்டிற்காக 2015 ஆண்டு மார்ச் மாதம் 7-ந்தேதி முதல் பிரிமியம் செலுத்தி வந்தார்.

அதற்கான பிரிமியத்தொகை ரூ.9,164 பெற்றுக்கொண்ட பாமணி அஞ்சல் அலுவலகம் மற்றும் திருத்துறைப்பூண்டி தலைமை அஞ்சலகம் காப்பீட்டிற்கான பத்திரம் வழங்காமல் காலம் கடத்தி வந்தனர். ஓராண்டு கடந்த நிலையில் அடுத்த ஆண்டிற்கான பிரிமியம் செலுத்த சென்றபோது பிரிமியம் வாங்க மறுத்ததுடன் காப்பீடு செய்யப்படவில்லை என கூறினர். அதிர்ச்சியடைந்த அவர், நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் மூலம் அஞ்சல்துறை தலைவருக்கு புகார் அளித்தார்.

அந்த புகார் மீது விசாரணை செய்த பட்டுக்கோட்டை அஞ்சல்துறை கண்காணிப்பாளர் நிதியாண்டு கடந்து பிரிமியம் பெறப்பட்டதால் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க முடிய வில்லை என்றும், உரிய விண்ணப்பம் அளித்தும் பாமணி அலுவலகத்தில் செலுத்திய ரூ.9164-ஐ பெற்று கொள்ள அறிவுறுத்தினார். இதனை தொடர்ந்து ராஜசேகர், அஞ்சல் துறையின் கவனக்குறைவால் ஏற்பட்ட இழப்பிற்கு திருவாரூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 16-ந்தேதி் வழக்கு தாக்கல் செய்தார்.

வழக்கை விசாரித்த நுகர்வோர் கோர்ட்டு நீதிபதி எம்.நசீர் அகமது, உறுப்பினர்கள் ஆர்.ரமேஷ் மற்றும் கே.சிவசங்கரி ஆகியோர் வழங்கிய உத்தரவில் பாதிக்கப்பட்ட ராஜசேகருக்கு பிரிமியம் தொகை ரூ.9,164-ஐ செலுத்திய தேதியில் இருந்து தொகை கொடுக்கும் நாள் வரை 12 சதவீத வட்டியும், அஞ்சல் துறையின் சேவை குறைபாட்டால் ஏற்பட்ட இழப்பீட்டிற்கு ரூ.50 ஆயிரமும், வழக்கு செலவிற் காக ரூ.2,500-ம் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் உத்தரவு கிடைத்த ஒரு மாத காலத்திற்குள் இந்த தொகை வழங்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் இழப்ப்ீட்டு தொகை ரூ.50 ஆயிரத்திற்கு புகார் மனு தாக்கல் செய்த தேதியில் இருந்து தொகை முழுவதும் செலுத்தும் நாள் வரை 12 சதவீத வட்டியுடன் அஞ்சல் துறை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

Next Story