இலங்கையில் இருந்து விடுதலையான நாகை மீனவர்கள் 7 பேருக்கு மல்லிப்பட்டினத்தில் வரவேற்பு


இலங்கையில் இருந்து விடுதலையான நாகை மீனவர்கள் 7 பேருக்கு மல்லிப்பட்டினத்தில் வரவேற்பு
x
தினத்தந்தி 9 Aug 2018 10:30 PM GMT (Updated: 9 Aug 2018 8:13 PM GMT)

இலங்கையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 7 பேருக்கு மல்லிப்பட்டினத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

சேதுபாவாசத்திரம்,

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே மல்லிப்பட்டினத்தில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நாகை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க செல்வது வழக்கம். மீன்பிடி தொழிலுக்காக மல்லிப்பட்டினத்திலேயே குடும்பத்துடன் தங்கி உள்ள இவர்கள், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு சொந்தமான படகுகளை, வாடகைக்கு எடுத்து மீன்பிடிக்க செல்கிறார்கள்.

அதன்படி கள்ளிவயல்தோட்டத்தை சேர்ந்த செய்புல்லா, அப்துல்ரஹ்மான் ஆகியோருடைய 2 படகுகளை, நாகை மாவட்டம் தரங்கம்பாடி குட்டியாண்டியூர்தெருவை சேர்ந்த நாராயணன்(வயது45), அவருடைய மகன் சக்திதாசன்(19), நாகூரை சேர்ந்த ஆயுள்பதி(45), கோடியக்கரையை சேர்ந்த கண்ணதாசன் (50), தரங்கம்பாடியை சேர்ந்த மாதேஷ்(19), பிரவீன்குமார்(30), பாலகிருஷ்ணன்(45) ஆகிய 7 மீனவர்களும் வாடகைக்கு எடுத்துக்கொண்டு மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் (ஜூலை) 23-ந் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், 7 மீனவர் களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி படகுகளுடன் சிறைபிடித்து சென்றனர்.

இவர்கள் இலங்கை யாழ்ப்பாணம் மல்லாகம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது மீனவர்களை விடுதலை செய்த கோர்ட்டு, அடுத்த மாதம்(செப்டம்பர்) 29-ந் தேதி படகு உரிமையாளர்கள் உரிய ஆவணங்களுடன் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது. மீண்டும் எல்லை தாண்டி மீன்பிடித்தால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் கோர்ட்டு எச்சரித்தது.

விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கை கொழும்பில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்களை சொந்த ஊருக்கு கொண்டு வர தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் தூதரக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வந்தனர்.

இந்த நிலையில் இலங்கையில் இருந்து விடுதலையான மீனவர்கள் 7 பேரும் நேற்று காலை 9 மணி அளவில் விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தனர். இதைத்தொடர்ந்து மல்லிப்பட்டினத்துக்கு அழைத்து செல்லப்பட்ட அவர்களுக்கு, அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக மீனவர்கள் 7 பேரையும் பட்டுக்கோட்டையில் உதவி கலெக்டர் மகாலட்சுமி சந்தித்து, ஆறுதல் கூறி ஆடைகளை வழங்கினார். அப்போது மீன்வளத்துறை உதவி இயக்குனர் சின்னக்குப்பன் உடன் இருந்தார்.

இலங்கையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட மீனவர்களில் ஒருவரான நாராயணன் கூறியதாவது:-

நாங்கள் அனைவரும் கொழும்பில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தோம். அங்கு உணவு வழங்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அதிகாரிகள் வந்து எங்களிடம் விசாரணை நடத்தினர்.

பின்னர் இந்திய தூதரக அதிகாரிகளின் உதவியுடன் விமானத்தில் திருச்சி அழைத்து வரப்பட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story