கோவையில் தொழில் அதிபர் குடும்பத்தோடு தற்கொலை முயற்சி; மனைவி சாவு, கந்துவட்டி கொடுமை காரணமா?


கோவையில் தொழில் அதிபர் குடும்பத்தோடு தற்கொலை முயற்சி; மனைவி சாவு, கந்துவட்டி கொடுமை காரணமா?
x
தினத்தந்தி 11 Aug 2018 12:15 AM GMT (Updated: 10 Aug 2018 9:49 PM GMT)

தொழில் அதிபர் குடும்பத்தோடு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் மனைவி பரிதாபமாக இறந்தார். இதற்கு கந்துவட்டி கொடுமை காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போத்தனூர்,

கோவை குனியமுத்தூர் அய்யப்பன் நகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஜானகிராமன் (வயது 44). இவர் பெண்களுக்கான உள்ளாடை தயாரிக்கும் தொழில் நிறுவனத்தை கரும்புக்கடை சாரமேட்டில் வாடகை கட்டிடத்தில் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சசிகலா (36). இவர்களுக்கு சினேகா (16), ஹேமாவர்ணா (14) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். சினேகா குனியமுத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2, ஹேமாவர்ணா 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

ஜானகிராமன் தனது தொழிலுக்காக பலரிடம் கடன் வாங்கியிருந்தார். ஆனால் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் கடனை திருப்பி கொடுக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஜானகிராமன் மிகவும் மனமுடைந்து காணப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜானகிராமன் வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் பூச்சி கொல்லி மருந்து வாங்கி வந்ததாக தெரிகிறது. இரவு 9 மணியளவில் அவர், தனது உறவினர் ஒருவருக்கு போன் செய்து ‘தான் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக’ கூறி விட்டு போனை வைத்து விட்டார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த உறவினர் உடனடியாக ஜானகிராமன் வீட்டுக்கு சென்றார்.

அங்கு கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது ஜானகிராமனும், அவரது குடும்பத்தி னரும் மயங்கிய நிலையில் கிடந்தனர். உடனே அவர், 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். ஆனால் ஆம்புலன்சு வருவதற்கு நேரமானதால் அவர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஆட்டோ மூலம் 4 பேரையும் குனியமுத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தார். அங்கு அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சசிகலா பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேருக்கும் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தகவல் கிடைத்ததும், குனியமுத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இதையடுத்து இந்திய தண்டனை சட்டம் 309 (தற்கொலை முயற்சி) உள்பட 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து குனியமுத்தூர் போலீசார் கூறியதாவது:-

ஜானகிராமன் கடன் தொல்லை காரணமாக தற்கொலைக்கு முயன்றது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பாலில் பூச்சிகொல்லி மருந்தை கலந்து மனைவி, மகள்களுக்கு கொடுத்து விட்டு தானும் குடித்து உள்ளதாக தெரிகிறது. அவர் செய்து வந்த தொழிலில் போதிய வருமானம் இல்லை. மேலும் அவருக்கு ரூ.1 கோடி வரை கடன் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவரால் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியவில்லை.

இந்த நிலையில் யாராவது கடன் திரும்ப கேட்டு அவருக்கு நெருக்கடி கொடுத்தார்களா? என்று தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். அவர் யார்-யாரிடம் எவ்வளவு கடன் வாங்கி னார்? எவ்வளவு கடன் திருப்பி கொடுத்துள்ளார்? என்ற தகவலையும் சேகரித்து வருகிறோம். இதற்கிடையில் கந்து வட்டி கொடுமை காரணமாக அவர் குடும்பத்தோடு தற்கொலைக்கு முயன்றாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறோம்.

ஜானகிராமனின் சொந்த ஊர் நீலகிரி மாவட்டம் குன்னூர் ஆகும். ஆனால் அவர் பல ஆண்டுக ளுக்கு முன்பே கோவை வந்து சாய்பாபா காலனியில் வசித்து வந்துள்ளார். குனியமுத்தூர் அய்யப்பன் நகருக்கு 2 மாதத்துக்கு முன்பு தான் குடிவந்துள்ளார். அவருக்கு கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் சொந்தமாக வீட்டுமனை இருப்பதாக தெரியவந்துள்ளது.

ஜானகிராமன் தற்கொலை முயற்சிக்கு கந்து வட்டி கடன் தொல்லை தான் காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

Next Story