மாவட்ட செய்திகள்

வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத கோவை அரசு மருத்துவமனை பெண் டாக்டருக்கு ‘நோட்டீசு’ + "||" + Did not appear to be prosecuted Coimbatore Government Hospital 'Notice' to girl doctor

வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத கோவை அரசு மருத்துவமனை பெண் டாக்டருக்கு ‘நோட்டீசு’

வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத கோவை அரசு மருத்துவமனை பெண் டாக்டருக்கு ‘நோட்டீசு’
கொலை வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத கோவை அரசு மருத்துவமனை பெண் டாக்டருக்கு ‘நோட்டீசு’ அனுப்பும்படி வேலூர் கூடுதல் விரைவு கோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.
வேலூர்,

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள அழிஞ்சிகுப்பத்தை சேர்ந்தவர் சார்லஸ் (வயது 24), தொழிலாளி. உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட சார்லஸ் கடந்த 2011-ம் ஆண்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற ஆட்டோவில் சென்றார். அழிஞ்சிகுப்பத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதுவது போன்று ஆட்டோ வேகமாக சென்றது. சிறிது நேரத்துக்கு பின்னர் சார்லஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விட்டு ஊர் திரும்பினார்.


அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ராஜா, தென்னரசு உள்பட 4 பேர் ஆட்டோ மோதுவது போன்று வேகமாக சென்றதற்கு சார்லஸ் தான் காரணம் என்றுகூறி இரும்பு கம்பியால் சார்லசை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இதுதொடர்பாக மேல்பாடி போலீசார் வழக்குப்பதிந்து ராஜா, தென்னரசு உள்பட 4 பேரையும் கைது செய்து வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர். இந்த வழக்கு வேலூர் கூடுதல் விரைவு கோர்ட்டில் நடந்து வருகிறது. சார்லஸ் உடலை பிரேத பரிசோதனை செய்த குடியாத்தம் அரசு டாக்டர் அங்கையர்கண்ணி நேரில் கோர்ட்டில் ஆஜராகி பதில் அளிக்கவில்லை. இதற்கிடையே டாக்டர் அங்கையர்கண்ணி கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாறுதலாகி சென்றார்.

இந்த வழக்கில் ஆஜராகும்படி கடந்த மாதம் 9, 24, 30-ந் தேதிகள் மற்றும் கடந்த 8-ந் தேதியில் மேல்பாடி போலீசார் நேரில் டாக்டர் அங்கையர்கண்ணியிடம் சம்மன் கொடுக்க முயன்றபோது, அதனை பெறாமல் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது.

இந்த வழக்கு நீதிபதி குணசேகரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது டாக்டர் அங்கையர்கண்ணி சம்மனை நேரில் பெறாமல் அலைக்கழித்தது மற்றும் வழக்கில் ஆஜராகாமல் இருப்பதற்கான காரணம் குறித்து உரிய விளக்கம் அளிக்கும்படி ‘நோட்டீசு’ அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். அதையடுத்து டாக்டர் அங்கையர்கண்ணிக்கு ‘நோட்டீசு’ அனுப்பப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் அண்ணாமலை ஆஜரானார்.