முழுஅடைப்பின் போது வன்முறையில் ஈடுபட்ட 185 பேர் கைது


முழுஅடைப்பின் போது வன்முறையில் ஈடுபட்ட 185 பேர் கைது
x
தினத்தந்தி 11 Aug 2018 4:34 AM IST (Updated: 11 Aug 2018 4:34 AM IST)
t-max-icont-min-icon

மராத்தா சமுதாயத்தினர் நடத்திய முழு அடைப்பின் போது புனேயில் வன்முறையில் ஈடுபட்ட 185 பேர் கைது செய்யப்பட்டனர்.

புனே,

கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு போராடி வரும் மராத்தா சமுதாயத்தினர் நேற்றுமுன்தினம் மாநிலம் முழுவதும் முழுஅடைப்பு போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தின் போது, மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன.

குறிப்பாக புனேயில் மராத்தா சமுதாய பிரதிநிதிகள் கலெக்டரை சந்தித்து கோரிக்கை தொடர்பான மனுவை அளிக்க சென்றிருந்த நேரத்தில் அங்கு திரண்டு இருந்தவர்கள் திடீரென கலெக்டர் அலுவலகத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர்.

மேலும் அங்கு ஒரு அறையில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினார்கள். மின்சார பல்புகளை உடைத்தனர். கலெக்டர் அலுவலக கேட்டையும் சேதப்படுத்தினர். போலீசார் அவர்களை தடியடி நடத்தி விரட்டினர்.

கலெக்டர் அலுவலகத்தை சூறையாடிய சம்பவத்தில் 5 பெண்கள் உள்பட 81 பேர் கைதானார்கள்.

புனே சாந்தனி சவுக் பகுதியில் ஒரு கும்பல் போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியது. இது தொடர்பாக 83 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் புனே நகரத்தில் ஆங்காங்கே நடந்த வன்முறைகள் தொடர்பாக 21 பேர் சிக்கினார்கள். மேற்படி வன்முறை சம்பவங்கள் தொடர்பாக கைதான 185 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story