காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: குமாரபாளையத்தில் 50 வீடுகளில் தண்ணீர் புகுந்தது


காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: குமாரபாளையத்தில் 50 வீடுகளில் தண்ணீர் புகுந்தது
x
தினத்தந்தி 11 Aug 2018 11:00 PM GMT (Updated: 11 Aug 2018 6:38 PM GMT)

காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் குமாரபாளையம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு, முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

குமாரபாளையம்,

மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1¼ லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் காவிரி கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கரையோர பகுதி பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி குமாரபாளையம் காவிரி கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் மேடான இடங்களுக்கு செல்லுமாறு நகராட்சி நிர்வாகம் சார்பில் தண்டோரா போட்டு எச்சரிக்கை விடப்பட்டது. பின்னர் மேடான பகுதிக்கு வரமறுத்த சுமார் 50 குடும்பத்தைச் சேர்ந்தவர்களை அதிகாரிகள் அங்கிருந்து அழைத்து வந்து கலைமகள் வீதியில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையில் குமாரபாளையம் கலைமகள் வீதி இந்திரா நகர், மணிமேகலை தெரு இந்திரா நகரில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. அவர்கள் வெளியேற்றப்பட்டு திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு, அரசின் சார்பில் இவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. 

Next Story