மாமியார்-மருமகள் உள்பட 3 பெண்களை தாக்கி நகை கொள்ளை டவுசர் கொள்ளையர்களுக்கு வலைவீச்சு


மாமியார்-மருமகள் உள்பட 3 பெண்களை தாக்கி நகை கொள்ளை டவுசர் கொள்ளையர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 12 Aug 2018 3:45 AM IST (Updated: 12 Aug 2018 12:24 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே மாமியார்-மருமகள் உள்பட 3 பெண்களை தாக்கி 9 பவுன் நகைகளை கொள்ளையடித்துச்சென்ற டவுசர் கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டி அருகே உள்ள பூக்கொல்லை வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் ரவீந்திரநாத். இவருடைய மனைவி தாமரைச்செல்வி (வயது 58). இவர் ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்று விட்டார். இவருடைய மகன் சதீஷ்குமார். இவருடைய மனைவி நிம்மி (28). நேற்று முன்தினம் இரவு தாமரைச்செல்வி தனது மருமகள் நிம்மியுடன் வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த சாந்தமூர்த்தி மனைவி அம்சவள்ளியும்(56) அங்கு வந்து அவர்களுடன் பேசிக்கொண்டு இருந்தார்.

அவர்கள் வீட்டின் கதவை திறந்து கிடந்ததால் டவுசர் அணிந்தபடி உருட்டுக்கட்டைகளுடன் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் வீட்டிற்குள நுழைந்து தாமரைச்செல்வியின் தலையில் கட்டையால் தாக்கி அவர் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்தனர். பின்னர் நிம்மியையும் தாக்கி அவர் அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியையும் பறித்தனர். இதைப்பார்த்து திடுக்கிட்ட அம்சவள்ளி அவர்களை தடுக்க வந்தபோது அவரையும் மர்ம நபர்கள் தாக்கி விட்டு ஓடி விட்டனர். இதில் படுகாயம் அடைந்த 3 பேரையும் சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இது குறித்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்களை தாக்கி நகைகளை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். 

Next Story