கோவையில் பயங்கரம்: பிரபல ரவுடி குத்திக்கொலை
கோவையில் பிரபல ரவுடி ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவருடைய நண்பரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை ராமநாதபுரம் பாலமுருகன் லே–அவுட்டை சேர்ந்தவர் சரவணன் (வயது 42). பிரபல ரவுடியான இவர் காட்டூர் சரவணன் என்று அழைக்கப்பட்டார். இவர் பல ஆண்டுகளுக்கு முன்பு காட்டூரில் வசித்துள்ளார். திருமணமாகாத சரவணன் மீது கொலை, கொள்ளை, கட்டபஞ்சாயத்து, ஆள் கடத்தல், வழிப்பறி உள்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பல்வேறு வழக்கில் கைது செய்யப்பட்ட சரவணன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்த அவருக்கும், வேறு சில ரவுடிகளுக்கும் இடையில் அடிக்கடி மோதல் ஏற்பட்டது. இதனால் அவர் ராமநாதபுரத்தில் இருந்து தனது அக்காள் வசிக்கும் கணுவாய்க்கு சென்றார்.
இந்த நிலையில் சரவணன் நேற்றுக்காலை 7 மணியளவில் தனது மோட்டார் சைக்கிளில் புரூக்பாண்ட் சாலை அருகே உள்ள சோமசுந்தரா மில் ரெயில்வே பாலத்தின் கீழ் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு மர்ம ஆசாமி சரவணனை வழிமறித்துள்ளார். அவர் நண்பர் என்பதால் சரவணன் மோட்டார் சைக்கிளை நிறுத்தி உள்ளார்.
பின்னர் அருகே வந்த அவருடைய நண்பர் திடீரென்று கத்தியால் சரவணனை சரமாரியாக கத்தி விட்டு தப்பி சென்று விட்டார். இதில் சரவணன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் போலீஸ் துணை கமிஷனர் லட்சுமி, காட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். இதையடுத்து பிணமாக கிடந்த சரவணன் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை தொடர்பாக ரவுடி சரவணனின் நண்பர் குங்பூ ஆறுமுகத்தை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். குங்பூ ஆறுமுகம் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார். சரவணன் அவரிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதனால் அவர் சரவணனை கத்தியால் குத்தி கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரபல ரவுடியை நண்பரே கத்தியால் குத்தி கொலை செய்த பயங்கர சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொலை செய்யப்பட்ட சரவணன் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி என 18 வழக்குகள் பதிவாகி உள்ளன. கடந்த 2004–ம் ஆண்டு பாப்பநாயக்கன்பாளையம் பழையூரில் 2 பேரை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு கத்தியுடன் போலீஸ்நிலையம் சென்று சரண் அடைந்து பரபரப்பை ஏற்படுத்தியவர் சரவணன்.
2015–ம் ஆண்டு கோவை பீளமேட்டில் பிரபல நகைக்கடைக்கு சொந்தமான தொழிற்சாலையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட 5 கிலோ தங்கக்கட்டிகளை ஒரு கும்பல் கொள்ளையடித்தது. அந்த வழக்கில் சரவணனுக்கு தொடர்பு உள்ளது.
கோவை ரேஸ்கோர்சில் சரவணன் நடத்தி வந்த டீக்கடை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்தது. அதை மாநகராட்சி அதிகாரிகள் அகற்ற வந்த போது அவர்களை மிரட்டிய வழக்கும் சரவணன் மீது உள்ளது.
கோவை ராமநாதபுரத்தில் 2012–ம் ஆண்டு உறவினர் ஒருவரை காரை ஏற்றி கொலை செய்து விட்டு விபத்து என நாடகம் ஆடிய வழக்கும் சரவணன் மீது உள்ளது. கோவை ராமநாதபுரம் போலீஸ் நிலைய எல்லையில் 2 கொலை முயற்சி வழக்குகளும், 2012–ம் ஆண்டு சாய்பாபா காலனியில் நடந்த ஒரு வழிப்பறி, 2011–ம் ஆண்டு துடியலூர் போலீஸ் நிலைய எல்லைக்குள் நடந்த ஒரு வழிப்பறி வழக்கு என மொத்தம் 18 வழக்குகள் பதிவாகி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.